×

நவகிரக தோஷம் போக்கும் நாதரூபன்

ஈசனது கட்டளைக்கு இணங்கி, ஒன்பது அமைச்சர்கள் இப்பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களே நவகோள் நாயகர்களான சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள். இந்த ஒன்பது கிரகங்களும் ஓர் சிவாலயத்தில் வடகிழக்கு திசையான ஈசான பாகத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். அவர்கள் வீற்றருளும் ஸ்தானத்தில், முருகன் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கின்றார். அந்த அற்புதமிக்க திருத்தலம்தான் கூந்தலூர். இத்தலத்தின் ஈசான திசையில் உள்ள புனிதமிகு தீர்த்தத்தில்… ஜனகரின் மகளும், ராமபிரானின் துணைவியாரும், லட்சுமி தேவியின் ஸ்வருபமான அன்னை சீதா பிராட்டி நீராடிய போது, சீதா தேவியின் கூந்தலில் இருந்து சில முடிகள் உதிர்ந்தது. அதனால் இப்பதிக்கு கூந்தலூர் என்ற பெயர் உண்டானதாக ஜம்புகாரண்ய புராணம் விவரிக்கின்றது. இப்பூவுலகின் மொத்த நிலப்பகுதியும் ஆதியில் “ஜம்பூத்வீபம்’’ என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது “நாவல் தீவு’’ என்பதே இதன் பொருளாகும். அவ்வகையில், சிறப்பு பெற்ற நாவல் மரக்காடாக இருந்த இடத்தில் ஈசன் தோன்றி உலகோரை காத்ததால் இத்தல ஈசர்  ஜம்புகாரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.

காகபுஜண்ட மகரிஷியின் பிரதான சீடரான ரோமசமுனிவர் அரி சொல் ஆற்றின் தென்கரையில் தவம் செய்து வரும் வேளையில், தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அகத்தியரின் திருவாக்குப்படி அஷ்டமாசித்தியால் தனது ரோமத்தின் வழியே தங்கம் வரவழைத்து, தந்து, அவர்களின் வறுமையை நீக்கிவந்தார். ஈசனது திருவிளையாடல் காரணமாக பொன் வரவழைக்கும் சித்து ஒரு சமயம் பலிதமாகாமல் போனது. உடன் ரோமசர் தனது தாடியை நீக்கிவிட்டு, குளிக்க மறந்து நாவல்காட்டீசரை தரிசிக்க சென்றுள்ளார். அவரை உள்ளே வரவிடாமல் தடுத்தனர், கணபதியும், கந்தனும். தவறுணர்ந்து மனம் வருந்திய ரோம மகரிஷி, ஆலய வாசலிலேயே சிவனை தியானத்திருக்க… அங்கேயே வந்து தனது திவ்ய திருக்கயிலை தரிசனத்தை காட்டியருளினார். அதோடு, ரோமசர் இங்கு ஈசனோடு ஐக்கியமானார். ஆலய ஈசான பாகத்தில் ஜீவசமாதியுற்றார். அதன் மேலே கந்தனும் கோயில் கொண்டார். ரோமசர் தபோரிஷி மட்டுமில்லாமல் ஓர் சிறந்த சித்தபுருஷரும் ஆவார். இதனால் இத்தலத்தில் நவகிரக ஸ்தானத்தில் வீற்றருளும் கந்தனை பக்தர்கள் வழிபடும்போது, ஞானஸ்கந்தரின் அனுகிரகத்தோடு, ரோமசரின் அருளும், கிரகாதிபதிகளின் திருவருளும் இரட்டிப்பாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இத்திருத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக்கோவையில் வைப்புத்தலமாக போற்றியுள்ளார். அதோடு, அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் ஒன்றைப் பாடி அருளியுள்ளார்.

கிழக்கு நோக்கிய ஆலயம் தோரணவாயிலுடன் திகழ்கிறது. ராஜகோபுரம் காணப்படவில்லை. உள்ளே… நுழைந்ததும் முதலில் தென்புறத்தில் சித்தி கணபதி தனி சந்நதி கொண்டுள்ளார். வடகிழக்கு திசையான ஈசான திசையில், நவகிரகங்கள் இருக்கும் ஸ்தானத்தில், நவகிரகங்களுக்கு பதிலாக வள்ளி – தெய்வானையுடன் கந்தன் குடிகொண்டு அருள்பாலிக்கின்றார். எதிரே சனீஸ்வரர் முருகனைப் பார்த்தவாறு காட்சி தருகின்றார். கணபதி மற்றும் கந்தனை வணங்கி, பின் நேராக சிவன் சந்நதியை நோக்கி நகர்கின்றோம். முதலில் பலிபீடம், மற்றும் நந்தியம்பெருமான் காட்சி தருகின்றனர். தென்திசை பார்த்தவாறு தனி சந்நதி கொண்டு அருள் மழை பொழிகின்றாள் அன்னை ஆனந்தவல்லி. பின் வெளியே வந்து மகாமண்டபத்தில் நிற்கிறோம். இங்கே நால்வர், கணபதி மற்றும் திருமால் ஆகியோர் காட்சி தருகின்றனர். அதோடு இடது புறத்தில் அம்பிகையின் பழைய சிற்பம் ஒன்று காணப்படுகின்றது. கருவறையில் நெடிய பானம் கொண்டு திருவருள் கூட்டுகின்றார் ஜம்புகாரண்யேஸ்வரர். அவரைக் கரம் குவித்து மனமொன்றி வணங்குகின்றோம். ஆலய வலம் வருகையில் சிவாலய கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கின்றோம். அதோடு ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்களையும் தரிசனம் செய்கின்றோம். அற்புதங்கள் நிகழ்த்தும் தலம். இயற்கையான சூழலில் அமையப் பெற்றுள்ளது. இங்கு தல விருட்சமாக நாவல்மரமும், தல தீர்த்தமாக சீதா தீர்த்தமும் உள்ளன. அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி வரை 7 மணி வரையும் திறந்திருக்கும். அனேக சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புடன் நடத்தப்படுகின்றன. அதோடு, கார்த்திகை மாத சஷ்டி, வைகாசி விசாகம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய தினங்களில் முருகனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் சனி – செவ்வாய் சேர்க்கை, சனி – செவ்வாய் பார்வை அமையப்பெற்றவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது இத்தலம்.

மேற்கண்ட அமைப்பு உள்ளவர்கள் வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து வருவர். அவர்கள் இவ்வாலயத்திற்கு வந்து, ஓர் மஞ்சள் பையில் தேங்காய் – தாம்பூலம் – தட்சணை வைத்து, முருகனுக்கு அர்ச்சனை செய்து, மூன்று முறை வலம் வந்து, அந்த மஞ்சள் பையை கந்தன் கருவறைக்கு முன்னே உள்ள கொடிக்கயிற்றில் கட்டி பிரார்த்திக்க வேண்டும். எந்தவித வேண்டுதலாக இருந்தாலும், 3 முதல் 300 நாட்களுக்குள் நிறைவேறும் என்பது இங்கு விசேஷ பிரார்த்தனையாக உள்ளது. மேலும் சனி – செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனிக்கிழமை செவ்வாய் ஹோரையிலும், செவ்வாய்க்கிழமை சனி ஹோரையிலும் இங்கு ஆலயத்திற்கு வந்து, முருகனுக்கும் சனிக்கும் அபிஷேகம் செய்து, மாலை சாற்றி, முருகனுக்கு சிவப்பு வஸ்திரமும், சனிக்கு நீலவஸ்தரமும் சாற்றி, முருகனுக்கு செந்துவரை சுண்டலும், இனிப்பும் படைக்க வேண்டும். சனிக்கு எள்ளுருண்டை படைத்திட வேண்டும். பின்னர், அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய… குழந்தை வரம், கல்யாணம், புது வீடு போன்ற அனைத்தும் சுபமாய் அமைகின்றது. அதோடு, கொடிய நோய்களும் நீங்குகிறது. வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் அனுபவபூர்வ உண்மையாகும்.கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் எரவாஞ்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது கூந்தலூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கி.மீ., தூரத்தில் கூந்தலூரை அடைந்துவிடலாம்.

The post நவகிரக தோஷம் போக்கும் நாதரூபன் appeared first on Dinakaran.

Tags : Navagraka Dhosham Bokum Natharuban ,Eisa ,NORTH-EAST ,EAST ,Navagiraka Dhosham Bokum Natharupan ,
× RELATED ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்...