×
Saravana Stores

ராஜகோபுர மனசு பகுதி-7

(திருவண்ணாமலை வல்லாள கோபுரக் கதை)

இதல் நல்சகுனமாக தூவிய விதைகளெல்லாம் முளைத்து, பால்பச்சையாய் பரவியிருந்த நிலத்திற்கு, இரவீந்திரப் பெருந்தச்சன் கற்பூர ஆரத்தியைக் காட்டினார். தங்கள் குலதெய்வமான ஸ்ரீவிராட் விஸ்வ பிரம்மத்தின் ஓவியம் முன், அடுக்கி வைத்திருந்த சிற்ப உபகரணங்களுக்கும் சேர்த்துக் காட்டினார். அடுத்ததாக கற்பூர ஆரத்தியை, உயரே தூக்கி எல்லோர்க்கும் காட்ட, அத்தனை ஸ்தபதிகளும் ஜோதியை பாவனையாக வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டனர். அங்கு வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த அருணை வாழ்ஜனமும் அவர்களோடு இணைந்து, கைகள் கூப்பி வணங்கியது, பரவசமாக ‘‘தென்னாடுடைய சிவனே போற்றி’’ எனப் பிளிறியது.

கற்பூரஜோதி மலையேறும் வரை காத்திருந்த ஸ்தபதிகள் அனைவரும், ஜோதி மலையேறியதும், தங்களின் பெருந்தச்சனின் காலில் விழுந்து வணங்கி ஆசியைப் பெற்றுக் கொண்டனர். எல்லோரையும் திருநீறிட்டு ஆசிர்வதித்த இரவீந்திரப் பெருந்தச்சன், அமரும்படி கேட்டுக் கொண்டார். அனைவரும் அமர்ந்தபின், தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.‘‘என் விஸ்வ பிரம்மத்தின் பிள்ளைகளே, மனிதர்கள் நீண்ட காலம் ஞாபகம் வைத்துக் கொள்ளும்படியான நற்செயல்கள், எல்லோராலும் செய்ய முடிவதில்லை.

அப்படியான செயல்கள் எல்லோருக்கும் வாய்க்காது. ஆனால், காலம் நமக்கு இப்பெரும்பணியை அருளியிருக்கிறது. முதலில் நான்கு திசைகளுக்கும், உயரமான நான்கு கோபுரங்கள் என்கிற இந்த பிரம்மாண்ட சிந்தனையை யோசித்த நம் மன்னரை, தலை வணங்குவோம். இது தெய்வப்பணி, எனவே உள்ளும், புறமும், தூய்மையாக இருங்கள். சிவசிந்தனையோடு ஈடுபடுங்கள். உயர்வு, தாழ்வற்று ஒற்றுமையாக வேலை செய்யுங்கள். இது ஈசன் பணியென்பதை புரிந்துகொண்டு வேலை செய்யுங்கள். இது என் வேலை, அது உன் வேலை என்கிற பிரிவுகளற்று செயல் புரியுங்கள். இங்கு அவசியமெனில், நானே தலைமேல் பாறை சுமப்பேன்.

அதுமட்டுமின்றி, காலம் எல்லாவற்றுக்கும் முந்தியது. இப்பணி, காலத்தையே முந்தப் போகிறப்பணி. நாளை, எழுப்புகிற நாம் இருக்க மாட்டோம். ஆனால், நாமெழுப்பும் வானுயர்ந்த கோபுரங்கள், காலம்தாண்டி நிற்கபோகிறது என்பதை உணர்ந்து பணி புரியுங்கள்.காலத்திற்கும் பேர் சொல்லப்போகிற இந்தச் செயல் தருகிற நிறைவே, நமக்கு பொற்கிழி. நம் தலைமுறையினருக்கு நாம் தருகிற பெருமிதம் கலந்த, கர்வம் மிகுந்த, புண்ணியம்.

அது துளியும்கூட பிசகிடக் கூடாதென்பதை நினைவில் கொள்ளுங்கள். நாளை வேறு அரசர்கள், வேறு நல்ல மனிதர்கள், இதைவிட உயர்ந்த கோபுரங்களை, நாற்புறங்களிலும் கட்டலாம். ராஜகோபுரமென அதையழைக்கும் மனிதர்கள், நம்மையெல்லாம் மறந்து போகலாம். ஆனால், இம்மலை நம் முகம் குறித்துக் கொள்ளும். இந்த அருணாசலம் நம்மை ஞாபகம் வைத்துக் கொள்ளும். அதுவே போதும் நமக்கு.

இதைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, நம் குலதெய்வத்தை மனத்தால் வணங்கி, இனி உங்கள் வேலையை ஆரம்பியுங்கள். நம் எல்லோர்க்கும் ஈசன் துணை நிற்கட்டும். இந்த அருணாசலத்தின் சூட்சும சித்தர்கள் நம்மை ஆசிர்வதிக்கட்டும். இனி பணியை துவங்கலாம்’’ என்று பேசி, தன்னுரையை முடித்த இரவீந்திரப் பெருந்தச்சன், கைகள் காட்டி, எல்லோரையும் வேலைகள் துவங்கும்படி, சைகை செய்தார்.

சடசடவென அனைவரும் எழுந்தனர். எழுந்த தங்கள் ஆசானை குனிந்து வணங்கியவர்கள், கொட்டகைக்குள் சிற்பிகளும், கொட்டகைக்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலுக்குள் உதவியாளர்களுமாய், தனித்தனியே பிரிந்து நகர்ந்து; அவரவர்க்கென கொடுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்தனர். சிறு உளியையும், சுத்தியலையும், நெற்றிமீது வைத்து வணங்கி, நாசியை மறைத்தபடி, முகத்தில் துணியை கட்டிக்கொண்டு, வேலைகளைத் துவங்கினர்.

அளவுகளைக் குறித்துகொண்டு, பாறைகள் அறுப்பது உதவியாளர்கள் வேலை. அறுத்த பாறைகளில், சிற்பங்கள் செய்வதும், அழகோவிய வேலைப்பாடுகள் பொறிப்பதும் சிற்பிகளின் வேலை. ஏற்கனவே, அறுத்து, ஓட்டைகள், விரிசல்கள் உள்ளதா என ஜலவாசம் செய்யப்பட்டு, சோதிக்கப்பட்டிருந்த பெரும் பாறைகள், அவற்றில் ஆண் பாறை, பெண் பாறை எதுவென நன்கு ஆராய்ந்து தரம் பிரிக்கப்பட்டு, எதிர்ப்பந்தலில், தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன.

வெயிலிலும், மழையிலும், காய்ந்திருந்தாலும், வெடிப்புறாத, உறுதித்தன்மை வாய்ந்தப் பாறைகள், ஆண்பாறைகளென்பதும், மண்ணுக்குள் புதைந்து, ஒருவித குளிர்ந்தத் தன்மையுடன் இருக்கின்ற பாறைகள், பெண்பாறைகளென்பதும் சிற்பக்கணக்கு.இருபது ஆட்கள் சுமக்கக்கூடிய கனமான, நீள்வடிவ ஆண்பாறைகள், உள்ளூர் கூலியாட்களால் சுமக்கப்பட்டு, பந்தலுக்குள் அமர்ந்திருந்த சிற்ப உதவியாளர்களிடம் கொண்டு வரப்பட்டன.

தூண்கள், அதிஷ்டானப் பீடங்கள் மற்றும் படிக்கட்டுகள் செய்வதே முதல் வேலை என்பதாலும், அவைகளைச் செய்ய, உறுதியான ஆண் பாறைகளே உதவும் என்பதாலும், முதலில் அவைகள் கொண்டு வரப்பட்டன. கொண்டு வரப்பட்ட பாறைகள், வரைபடங்கள் பார்த்து, அளவுகள் குறிக்கப்பட்டு, தேவையற்ற கழிவுகள் மேலும் அறுக்கப்பட்டன. சரியாக அறுக்கப்பட்ட பாறைகள் மீது, பாறைச் சிதறல்கள் தெறிக்க, தூசு, துகள்கள் பறக்க, வேகமாகப் புள்ளிகள் அடிக்கப்பட்டன. மெல்லிய லயத்துடன் உளியோசைகள் இடைவிடாது கேட்க ஆரம்பித்தன.

உதவியாளர்களால் புள்ளிகள் அடிக்கப்பட்ட பாறைகள், சிற்பிகளிடம் கொண்டு வரப்பட்டன. சிற்பிகள் மாதிரி ஓவியங்களைப் பார்த்து, அற்புதங்கள் செய்தார்கள். கூர்மையான சிறுகத்தி போன்றவொன்றை வைத்துக்கொண்டு, கீறிக்கீறி நுணுக்கமாக வேலைகள் செய்தார்கள். மொத்தத்தில், ஒரு அற்புதமான வேலை, மிக அற்புதமான மனிதர்களால் தொடரப்பட்டன.
நான்கு பக்கமும் வேலைகள் விறுவிறுப்பாயின. கோபுரங்களின் அதிஷ்டான, உபபீடங்களுக்கான கட்டுமானப் பாறைகள் வேகவேகமாக அடிக்கப்பட்டு, தயாராகிக் கொண்டிருந்தன. ஸ்தூபி, சிகரங்களுக்கான வேலைகள் வேகமாயின. முதல் தளம் வரைக்கும் எழுப்பப்பட போகிற கருங்கற் பணிகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாயின.

இரவீந்திரப் பெருந்தச்சன், பிரம்பு நாற்காலியிலமர்ந்தபடி, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். அரைநாழிகைக்கு ஒருமுறை எழுந்துபோய் அத்தனையையும் மேற்பார்வையிட்டார். ‘‘சிற்பசாஸ்திர அளவு மாறவேகூடாது. அளவுகளை அடிக்கடி சரிபார்க்கும்படி’’, உதவியாளர்களுக்கு கட்டளையிட்டார். கோபுர வாயிலின் இருபக்க நிலைகளிலும் அமையபோகிற, கொடியைப் பற்றியபடி நிற்கும் நடனப் பெண்மணியின் அங்கவளைவுகளில், கோபுரவாயிலின் மேற்புறவிதானங்களில் அமையப்போகும் தாமரை பீடங்களில், பீஜவடிவ எந்திரங்களில், துளியும் பின்னமிருக்ககூடாதென உறுதியாக தெரிவித்தார்.

வேலையாட்களின் வேகம், அவருக்கு சந்தோசத்தைத் தந்தாலும், உள்ளுக்குள் ஏதோவொரு கலக்கம் இருந்து கொண்டேயிருந்தது. ‘‘இம்மாபெரும்பணிக்கு, இந்நாட்கள் போதாது’’ என்கிற கவலை, எழுந்து கொண்டேயிருந்தது. ‘‘மதுரை மீனாட்சி கோயில் வேலைக்கு, ஆட்களோடு போயிருக்கிற உறவுக்காரனை அழைக்கலாமா? அல்லது விஜயநகரிலிருந்து புதிதாய் ஆட்களை வரவழைக்கலாமா?’’ என்கிற யோசனை ஓடிக்கொண்டேயிருந்தது.

ஆனால், அவர் கவலையை ஈசன் நீடிக்க விடவில்லை. பெருந்தச்சனின் யோசனை புரிந்து செயல்படுகிற வேலையாட்கள் தான். அவரின் வரம். அவராட்கள் பம்பரமாக சுழன்றார்கள். பொழுதோடு எழுந்து, பேயாய் உழைத்து, பொழுதோடு இறங்கினார்கள். உணவுக்கான ஓய்வு நேரம் தவிர, இடைவேளைவிடாது இயங்கினார்கள். மழை, வெயில் பார்க்காமல், கால நேரம் காணாமல் உழைத்தார்கள்.

அதுமட்டுமின்றி, அடிக்கடி அமைச்சரவையாட்கள் வந்து, தேவைகள், வசதிகள் குறித்து விசாரித்து விட்டுப் போனதும், உள்ளுர் மக்கள், கூடைகளில் அதிரசமும், சீடையும், முறுக்கும் அன்போடு கொண்டு வந்து தந்ததும் அவர்களை மேலும் உற்சாகமாய் வேலை செய்ய வைத்தது. மொத்தத்தில், ஆட்கள் குறைவு பற்றிய கவலையை, பெருந்தச்சன் மறந்தே போகும்படி, அவராட்கள் வேலை செய்தார்கள்.

நாட்கள் நகரநகர, நிதானமாக ஆரம்பித்தவேலை, அசுரமாக வேகமெடுத்தது. அறுத்த பாறைகள், சிற்ப சாஸ்திரப்படி தயாராகின. கோபுரநிலைவாசலின் தூண்களாகின. கோபுரத்தின் மேற்கூரை விதானங்களாயின. துணிகளில் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள், அச்சு அசலாக, அப்படியே பாறைகளுக்கு இடம் மாறின. தயாரானப் பாறைகள், செஞ்சாந்தினால், அகரவரிசையில் குறியிடப்பட்டன. குறியிடப்பட்ட பாறைகள், உள்ளூர் மக்கள் உதவியுடன், வரிசைப்படி ஒன்றின்மேல் ஒன்றாய் ஏற்றிவைத்து, நிறுத்தப்பட்டன. நான்கு திசைக் கோபுரங்களும் மெல்லமெல்ல தயாராகின. பல்லாயிரம் தேனீக்கள் சேர்ந்தமைக்கும் கூடுபோல, எல்லா கோபுரங்களும், அழகாக, அதே நேரத்தில் கம்பீரமாக, அதிஷ்டானம் வரை எழும்பிக் கொண்டிருந்தன.

ஒரு நல்லநாளில், படைவீரர்கள் புடைசூழ, அமைச்சர்கள் பின் தொடர, மனைவியரோடு வந்த, மன்னர் வீரவல்லாளர், நடக்கும் கோபுரப் பணிகளைக்கண்டு, சந்தோசமானார். இரவீந்தப் பெருந்தச்சனை அருகிலழைத்தார். அருகில் வந்து காலில் விழமுற்பட்ட பெருந்தச்சனைத் தடுத்து. நிமிர்த்தி, இழுத்தணைத்துக் கொண்டார். ‘‘அற்புதம் செய்திருக்கிறீர்களய்யா’’ என பாராட்டினார். ‘‘நீங்களும் தான்’’ என, திரும்பி ஸ்தபதிகளைப் பார்த்து கைகள் தூக்கி வாழ்த்தினார்.

அனைவரையும் அருகேயழைத்து, அவரவர் பெயர்கள் கேட்டு அறிந்து கொண்டார். சகஜமாக அவர்களுடன் பேசினார். வசதிகளில் குறைகளேதேனும் உள்ளதாவென என்று கேட்டார். ‘‘அதென்னப்பா ஆண்பாறை, பெண்பாறை? என மன்னர் குசும்புடன் சிரித்தார். விவரிக்க, ஆர்வமாகக் கவனித்தார். ‘‘நாற்புறமும் எழப் போகும் மதில்கள் உயரம் எவ்வளவு?’’ நான்கு ஆள் உயரமிருக்குமா?’’ என்றார். ‘‘ஆறாட்கள் உயரம்’’ என பதில்வர, வியந்தார். நிலைகளில் வரப்போகும் சிற்பங்கள் எவை எவை? இன்னும் பாறைகளின் தேவை இன்னுமுண்டா?, செங்கற்கள் எப்போது தேவைப்படும்?, கிழக்கு கோபுரம் மட்டும் முடிய இன்னும் எத்தனை நாளாகும்’’ என ஆர்வமுடன் பல கேள்விகள் கேட்டார். அத்தனை பதில்களையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார்.

மன்னரின் அன்பில், ஸ்தபதிகள் கிறங்கினர். கிறங்கிய ஸ்தபதிகளில் சிலர், இனி காலம் முழுக்க அருணாசலம்தான், இங்கிருந்து நகர்வதில்லையென உறுதியெடுத்தனர்.மன்னர் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, அமைச்சர்களிலொருவர் நகர்ந்து வந்து, இளையராணியிடம் ஏதோ கிசுகிசுக்க, மன்னரை நெருங்கிய இளையராணி, ஆந்திரத்திலிருந்து, படவேடுராய சிம்மாசனமடத்திலிருந்து, தேவாங்ககுரு ஜகத்குரு பண்டிதா தாத்ய சுவாமிகளின், ஓலை சுமந்து, மடத்தாட்கள் வந்திருக்கும் விவரம் சொன்னார்.

நிமிர்ந்து பார்த்த மன்னர், அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டார். கிளம்பும்முன், பெருந்தச்சனை பிரியத்துடன் பார்த்து, ‘‘இந்த கோபுரப் பணியின் சம்பந்தமாக, எப்போது வேண்டுமானாலும், என்னைச் சந்திக்க உங்களுக்கு அனுமதியுண்டு’’ என்றவர், திரும்பி மூத்த ராணியைப் பார்த்தார். ‘‘புரிந்தது’’ என்பது போல, மல்லம்மாதேவி பணிவாக, சரியென்பதாக தலையாட்டினார்.வேகமாக அரண்மனை திரும்பிய மன்னர், மடத்து ஆட்களை வரவேற்றார். அவர்கள் தந்த, தன் தேவாங்க குருவின் ஓலையை பணிவுடன் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். வாசிக்கும்படி, மல்லம்மாதேவியிடம் தந்தார். வாங்கிய மல்லம்மாதேவி, உரக்கப்படித்தார்.

ஓம் ஸ்ரீகாயத்ரியை நமஹ.ஸ்ரீ முகம்.ஜகத்குரு ஸ்ரீ பண்டிதா தாத்ய சுவாமிகளால், மன்னரின் லிங்கபூஜைக்கான தீட்சை நாளாக, வருகின்ற பௌர்ணமி தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளும் புறமும் தூய்மை விரதம் கொண்டு, அரசரும், அரச குடும்பத்தாரும் மடம் நோக்கி வரவேண்டுமென்பதே, தேவாங்க குருவின் ஆசியுடன் ஸ்ரீமடம் வழங்கும் செய்தி. மன்னரையும், மன்னர் குடும்பத்தாரையும் வரவேற்க ஸ்ரீமடம் காத்திருக்கிற ஹொய்சாளத்திற்கு புகழ் சேரட்டும். விஜயீ பவ.

ஓம் ஸ்ரீ சூடாம்பிகை நமஹ:படித்து முடித்த மல்லம்மாதேவி, ‘‘ஒன்றன்பின் ஒன்றாக நல்லது நிகழ்கிறது, சகலமும் ஈசன் கருணை’’ என்றார். மன்னர் சந்தோசமானார். தக்க பரிசுகளோடு மடத்திற்கு பதிலோலை கொடுத்தனுப்பினார். மல்லம்மாவை நோக்கி, ‘‘உண்மைதான் சொக்கி, நீ சொல்வது போல, ஒன்றன்பின் ஒன்றாக நல்லது நிகழ்கிறது’’ என்றார்.

ஆனால், உண்மையில், நன்மையும், தீமையும் என்றும் இணை பிரியாதவை. ஒன்று முன்வாசல் வழியேவர, மற்றொன்று பின்வாசல் வழியே வரும். வந்தது. ஒரு சுபநாளில், தன் சுற்றத்துடன் மன்னர், மடம் நோக்கி நகர்ந்த அதேவேளையில், அதுநாள்வரை ஒற்றுவேலைப் பார்த்த சுல்தானின் ஒற்றனிடமிருந்து மதுரையை நோக்கி, கோபுரப் பணிகள் குறித்த தகவல்கள் பறந்தது. அருணசமுத்திரம், கோபுரங்களை மட்டுமல்ல, ஒரு போரினையும் எதிர் நோக்கியிருந்தது.

(தொடரும்)

குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு பகுதி-7 appeared first on Dinakaran.

Tags : Ravindra Perunthachan ,Srivirat Visva Brahma ,
× RELATED திருமணத் தடைக்கு அவசியம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தைச் சொல்ல முடியுமா?