×

கங்கையில் கரையும் அசுத்தங்கள் என்னவாகின்றன?

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 72 (பகவத்கீதை உரை)

இருட்டு பாபமென்றால், ஒளிதான் ஞானம். ஒளி தோன்றிவிட்டால், விலக மாட்டேன் என்று இருளால் அடம்பிடிக்க முடியாது. பலருக்கும் ஒளியை ஏற்றத் தயக்கம், சோம்பேறித்தனம் அல்லது இருட்டின் மாய சுகத்தில் போலியாக மேற்கொள்ளும் ஆனந்தம்!பாபமும், புண்ணியமும் வாழ்க்கையின் யதார்த்தங்களாகிவிட்டன. பாபத்தால் நிம்மதியின்மை, புண்ணியத்தால் நிம்மதி என்ற அனுபவார்த்தமான உண்மை புரிந்தாலும் பாபமும், புண்ணியமும் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் புண்ணியம் செய்பவர்களைவிட, பாபம் செய்பவர்களாலேயே ஞானம், அதிக அளவில் தேடப்படுகிறது!

யதைதாம்ஸி சமித்தோ அக்னிர் பஸ்மஸாத்குருதே அர்ஜுன
ஞானாக்னி ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா (4:37) ‘‘அர்ஜுனா, கொழுந்து விட்டெரியும் தீயானது அதனுள் இடப்பட்ட அல்லது தன்னை அண்டியிருக்கும் எந்தப் பொருளையும் சாம்பலாக்கிவிடுவது போல, ஞானத்
தீயானது எல்லா கர்மாக்களையும் பொசுக்கிவிடுகிறது.’’

பாபம், புண்ணியம் இரண்டுமே கனவைப் போன்றவைதான். தூக்கத்தில் துர்க்கனவு காண்கிறோம். அந்தக் கனவின் வீரியத்துக்கேற்ப ஊளையிடவோ அல்லது கத்தவோ செய்கிறோம். பக்கத்தில் படுத்திருப்பவர் தம் தூக்கம் கலைந்து நம்மை உலுக்கி எழுப்பும்போது நாம் பிரமிக்கிறோம். திடுக்கிட்டு சுய நினைவுக்கு வருகிறோம். கனவின் காரணமாக நம் உடல் வியர்த்தும் போயிருக்கிறது. கனவால் போட்ட கத்தலால் தொண்டையும் வறண்டிருக்கிறது. ஆனால், உடனே கனவு கலைந்து விடு கிறது, நம் நினைவிலிருந்தும் மறைந்து விடுகிறது. சில சமயங்களில் வெகுவாக முயற்சித்தும் அந்தக் கனவு, நினைவுக்கு வரமாட்டேனென்கிறது! கனவு என்பதை பாப அல்லது புண்ணிய கர்மாவாக வைத்துக்கொள்வோமானால், பிறகு சுயநிலைக்கு வருவதை ஞானம் அடைவதற்கு ஒப்பிடலாம்.

எவ்வளவு பெரிய பாவியானாலும், எல்லோரையும் விஞ்சிய பாவியே ஆனாலும், ஞானம் என்ற ஒளிக்கீற்று நம்முடைய எல்லா பாவங்களையும், கலைந்து போகும் கனவைப்போல மறைந்துபோக வைத்துவிடுகிறது. காலை புலரும்போது இரவு முடிந்து விடுகிறது. தூக்கம் கலையும்போது கனவுகளும் காணாமல் போய்விடுகின்றன. விழித்துக் கொள்ளும் எந்த மனிதருக்கும் கனவுகளுடனான தொடர்பு முற்றிலும் அறுபட்டுப் போய்விடுகிறது.

இருள் சூழ்ந்த ஒரு பாதையில் போக வேண்டியிருக்கிறது. வானில் சந்திர ஒளியோ, பாதையில் விளக்குக் கம்பமோ இல்லை. இருளை நினைத்தால் பயமாக இருக்கிறது. இருள் விலகிவிட்டால் பயம் போய்விடும் என்று தோன்றுகிறது. உடனே ஒரு டார்ச் லைட்டை எடுத்துச் செல்கிறோம். அதன் விசையைத் தட்டுகிறோம். ஒளி முன்னே பாய்கிறது, இருள் விலகுகிறது, பாதை தெரிகிறது, நம் பயமும் நீங்குகிறது.

டார்ச் லைட் நம் பயத்தைப் போக்குவதில்லை, அது இருளைத்தான் போக்குகிறது. அதனால் பயண முடிவில், முற்றிலுமாக வெளிச்சத்துக்கு வந்துவிட்ட பிறகு, நம் மனதிலிருந்து பயம் முற்றிலும் நீங்கிவிடுவதோடு, இனி நமக்கு டார்ச் லைட்டின் தேவையும் ஏற்படாது.எல்லா கர்மாக்களையும் ஞானாக்னி பொசுக்கிவிடுகிறது என்று கிருஷ்ணன் கூறுகிறார். ஞானாக்னி என்று அவர் குறிப்பிடுவது, நான், எனது என்ற அகங்காரமற்ற தெளிவுநிலையை. அனைத்தையுமே பரந்தாமனுக்கு அர்ப்பணித்துவிடும் பேரானந்த நிலையை.

ஞானியை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடலாம். அதில் முகம் பார்க்கலாம். பிம்பம் தெரியும். அதன் முன்னிலிருந்து விலகிவிட்டால், பிம்பமும் மறைந்துவிடும். கண்ணாடிக்கு அந்த பிம்பத்தை அப்படியே பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தனக்கு எதிர்ப்படுவதை பிம்பித்துக் காட்டுவதுதான் அதனுடைய கர்மா. எதிர்ப்படாவிட்டால், இல்லை. பிரதிபலிக்கத் தெரிந்த தன் குணத்தால் அது கர்வப்படுவதுமில்லை; அப்படி பிரதிபலிக்க எதிரே ஒன்றும் இல்லாவிட்டாலும் அதற்காகக் கவலைப்படுவதுமில்லை.

மாறாக அப்படி கண்ணாடி முன் நிற்பவர்தான் தன் அழகைத் தானே ரசித்துக்கொண்டும், வியந்துகொண்டும் இருப்பார். தன் முகத்தில் மேலும் சில திருத்தங்களை அந்தக் கண்ணாடி யின் உதவியுடன் செய்துகொண்டு தன்னை மேலும் அழகாக்கிக்கொள்வார். இதில் பெருமைப்படுவார், கர்வப்படுவார். அதே அழகற்றவர் எதிர்பட்டால் கண்ணாடி அவரை அழகாகக் காட்டாது. ‘உள்ளது உள்ளபடி’ என்பதுதான் அதன் இலக்கணம். தன்னை அழகாகக் காட்டவில்லையே என்று அழகற்றவர் வருத்தப்பட முடியாது. வேண்டுமானால் தன் தகுதியின்மையால் தன்மீது தானே வெறுப்புற்று அந்தக் கண்ணாடியை உடைத்துப் போடலாம்.

அவ்வளவுதான். அஞ்ஞானிகளை கேமராவினுள் உள்ள ஃபிலிமுடன் ஒப்பிடலாம். கேமராவின் லென்ஸ் காட்சியைப் பார்க்கிறது. அந்தக் காட்சியை அப்படியே ஏற்றுக் கொள்கிறது. பிறகு அதை உள்வாங்கி தனக்குப் பின்னாலுள்ள ஃபிலிமுக்கு அனுப்புகிறது. அந்தக் காட்சியை ஃபிலிம் சிக்கெனப் பிடித்துக்கொள்கிறது. தன்னிலிருந்து அந்தக் காட்சியை நீக்கவே முடியாதபடி தன்னோடு பதிப்பித்துக்கொண்டுவிடுகிறது. அந்நாளைய கேமராக்களில் நெகடிவ், பிறகு பாஸிடிவ் என்று இரு நடைமுறைகளில் காட்சியைப் பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது எல்லாமே டிஜிடல். நெகடிவ், பாஸிடிவ் என்ற பேச்சுக்கே இடமில்லை. ‘உள்ளது உள்ளபடி.’ அப்படியே அந்தக் காட்சியை, கார்டிலிருந்து அப்போதே கணினி மென்பொருளுக்குப் பரிமாற்றம் செய்து விட முடியும்! ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்பதுபோல, இந்த ஃபிலிம் (அல்லது டிஜிடல் கார்டு) முழுவதுமாக ஈர்த்துக் கொண்டு விடுவதுபோல, அஞ்ஞானிகள் பற்றை விலக்காமல், விலக்க முடியாமல் இருக்கிறார்கள்.

கேமரா ஃபிலிம் காட்சி மீது பற்றுவைத்து அதனை அப்படியே தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது. இப்போது அதனிடமிருந்து அந்தக் காட்சியைப் பிரிக்கமுடியாது. ஃபிலிமே
அழிந்தால்தான் காட்சியும் அழியும். அஞ்ஞானத்தை மேற்கொண்டவனின் அவல நிலையும் அப்படித்தான். அஞ்ஞானத்தில் எங்கே தவறு ஆரம்பிக்கிறது என்றால், இயல்பையே தன் சாதனையாகக் கருதிக்கொள்ளும்போதுதான். சுவாசிப்பதை தன் சாதனையாக ஒரு அஞ்ஞானி கருதிக்கொள்வான்! சுவாசிப்பது என்பது இயல்பு. யாராலுமே கட்டுப்படுத்த முடியாத, நிறுத்தவே முடியாத இயல்பு. அது தானாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆண்டாண்டு காலமாக எத்தனையோ ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், மாற்று உத்திகள்… ஆனால், சுவாசம், எந்த ஆராய்ச்சிக்கும் உட்படாத, உட்படவேண்டாத, நிரந்தரமான மனித இயக்கம். இந்த ஒரு யதார்த்த உதாரணம் மூலமாக இறைவன் தன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறான். இதைப் புரிந்து கொள்ளாத அஞ்ஞானிதான், ‘நான்’ என்றும், ‘எனது’ என்றும் அகம்பாவம் கொள்கிறான்.

ஒரு ஞானிக்குள் அக்னி கனன்றுகொண்டேயிருக்கும். அது சுயத்தை நெருங்கவிடாது, நெருங்கினாலும் எரித்துவிடும். ‘இந்த ஞானாக்னிக்கு உன் கர்மாக்கள் அனைத்தையும் இரையாக்கி விடு. அதாவது, எனக்கே அர்ப்பணித்து விடு,’ என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன்.

ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த காலேனாத்மனி விந்ததி (4:38)

‘‘ஞானம்தான் மிகவும் உயர்ந்தது, பரிசுத்தமானது. அதற்கு ஒப்புமை கூற எதுவுமேயில்லை. அதனால் பிற எல்லாமும்தான் தூய்மையாகுமே தவிர, அதை எதனாலும் மாசுபடுத்த இயலாது.’’ அப்பழுக்கற்றதும், மிகவும் சிறந்ததுமான ஞானத்தை, முறையாகக் கர்மயோகம் செய்பவனால் அடையமுடியும். அவன் எப்போதுமே விழித்தெழுந்தவன் போன்று சுறுசுறுப்பானவன். உறக்கமோ, உறக்கத்தில் ஒருவன் காணும் கனவோ, அவன் தூங்கியெழுந்ததும் எப்படி ஒன்றுமில்லாமல் போகிறதோ, அதுபோன்ற ஒரு தெளிவை, ஞானத்தை, தூங்கியெழுந்தபோது மட்டுமல்லாமல் நாள்பூராவும், எந்நேரமும், ஏன் அந்தத் தூக்கத்திலும்கூட கொண்டிருப்பவன், கர்மயோகத்தை முறையாகச் செய்பவனாக இருப்பான். பிற அனைத்தையும் பரிசுத்தமாக்கு வதோடு, அவற்றை ஆரோக்கியமாகவும் ஆக்கும் வல்லமை ஞானத்துக்கு உண்டு, சூரியப் பிரகாசம்போல.

ஞானமடைந்தவன் நோயுறவும் மாட்டான். புலன்கள் இருந்தும் இல்லாததுபோல அவன் இயங்குவதால், அவை எந்த இச்சைக்கும் ஆட் படுவதில்லை, அதனால் அந்த இச்சை அவனுள் எந்த நோயையும் உருவாக்குவதில்லை. நோய் என்பது உடல் பிணி மட்டுமல்ல, உள்ளப் பிணியும்கூட. அதனாலேயே அவன் எதிலும் ஆசை கொள்வதுமில்லை, ஏமாற்றமடைவதும் இல்லை. பொறாமை இல்லை, அவதூறு இல்லை, பகை இல்லை, வன்மம் இல்லை; அதேபோல சந்தோஷமில்லை, குதூகலித்தல் இல்லை, இன்பக் கிளர்ச்சி இல்லை, களியாட்டமில்லை. நிர்ச்சலனம்தான் அவனுடைய மனோநிலை. அதனாலேயே அவன் முகத்தில் சாந்தம் பூத்திருக்கிறது. அதுவே அவனிடம் நல்லெண்ணம் கொண்டோர் நெருங்குவதற்கும், துர்எண்ணம் கொண்டோர் விலகுவதற்கும் ஏதுவாகிறது.

கங்கை நதி, தன்னிடம் சேரும் அசுத்தங்களையும் தூய்மைப்படுத்துகிறது. அதாவது அவற்றைத் தன்னுள் கரைத்துக்கொண்டு, அதேசமயம் தான் அசுத்தப்படாமலும் திகழ்கிறது. அந்த அசுத்தங்கள் எங்கே போகின்றன? ஆவியாகிவிடுகின்றனவா? கரைந்து உருத்தெரியாமல் போய்விடுகின்றனவா? அப்படியே கரைந்தாலும் அசுத்தங்களின் துர்நாற்றம், கசடு போன்ற கூறுகள் எங்கே போய்விட்டன?

அதுதான் கங்கையின் சிறப்பு. பிற சேர்க்கை களால் தான் அசுத்தமாகாததோடு, அவற்றையும் சுத்தமாக்கும் அற்புத சிறப்பு அந்தப் புனித நதிக்கு உண்டு. இத்தகையவன்தான் ஞானி. துர்புத்தி கொண்ட யாரும் அவனை நெருங்கினாலும், அவர்கள் தம் உரு இழந்துவிடுவார்கள், அதாவது தன்மை மாறி விடுவார்கள். அந்த அளவுக்கு ஞானி அவர்களைப் புடம்போட்டுவிடுவான், வெகு இயல்பாகவே! ஞானியின் நடவடிக்கைகள் சமுதாய அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால் உணர்ச்சிவசப்படுதலால் சமுதாயத்துக்கு நலன் ஏற்படும் என்று அவன் நம்புவதில்லை.
அதனாலேயே அவன் அமைதியாக இருக்கிறான்.

சாலைப் போக்குவரத்தில் திடீரென்று ஒரு நெருக்கடி தோன்றுகிறது. அரை கிலோ மீட்டர் முன்னால் ஏதோ காரணத்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய தடங்கலால், சங்கிலித் தொடர் சம்பவமாக அடுத்தடுத்துப் பல வாகனங்கள் சிறிதும் முன்னேறிச் செல்ல முடியாதபடி முடங்கி விடுகின்றன. காரணம் என்னவென்று தெரியாததாலும், அந்தக் காரணத்தை அறிந்துகொண்டு அதை நிவர்த்தி செய்து போக்குவரத்தையும் சீர்செய்ய இயலாததாலும், பல வாகனங்கள் பெருத்த ஒலி எழுப்பிக்கொண்டு தம் பொறுமையின்மையைக் காட்டிக் கொள்கின்றன.

இப்படி ஒலி எழுப்புவதால் பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை என்பதோடு, அது அவர்களுக்குக் கூடுதல் மன உளைச்சலையும், முன்னே நிற்கக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு எரிச்சலையும்தான் உருவாக்குகின்றன. இதுபோன்ற போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய ஒரு வாகனத்தில் ஒருவர் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல், அமைதியாக ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். உடன் பயணித்தவர்களுக்கு வியப்பு மற்றும் அவர் மீது கோபம்.

சூழ்நிலையை உணராமல், சற்றும் எந்த வினையையும் ஆற்றாமல், கொஞ்சம்கூடக் கலங்காமல் வெகு சுவாதீனமாகப் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாரே என்று கோபம். சிக்கலாகிப்போன போக்குவரத்தை தம் கூக்குரலாலும், கண்டனங்களாலும் மேலும் குழப்பிக் கொண்டிருந்த அவர்களை, இவர் அமைதியாக இருப்பது எரிச்சலடைய வைத்தது. ‘இப்படிப் பொறுப்பில்லாமல் இருக்கிறாரே!’ என்று மனதுள் கறுவினார்கள்.

அவரிடம், ‘‘ஏன் கொஞ்சமும் சலனமின்றி இருக்கிறீர்கள்? இந்தப் போக்குவரத்து நெருக்கடியால் நீங்கள் பாதிக்கப்படவில்லையா?’ என்று கடுமையான குரலில் கேட்டார்கள். ‘‘இல்லை. ஏனென்றால் இது எனக்கு மட்டுமான தனிப் பாதிப்பு இல்லையே!’’ என்று அமைதியாக பதிலளித்தார் அவர்.

சுற்றி நின்றவர்களுக்குக் குழப்பம். யாராவது முயற்சி செய்யட்டும், அந்த முயற்சியால் பாதை சீரானால், அதன்பிறகு பயணத்தைத் தொடரலாம். அதுவரை ஏன் சிரமப்படவேண்டும் என்ற சுயநலமியாக இருக்கிறாரே என்று ஆத்திரம்.‘‘நீங்களும்தானே இந்த நெருக்கடியில் சிக்கியிருக்கிறீர்கள்? உங்கள் பங்குக்கு ஏதேனும் முயற்சிக்கக்கூடாதா?’’‘‘வெறுமே கத்துவதாலும், எரிச்சலடைவதாலும், இதுவரை நீங்கள் இந்தப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்க எந்தவகையில் உதவி விட்டீர்கள்? உங்களுக்கு முன்னால் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏற்பட்டிருக்கும் போக்குவரத்துத் தடையை அதன் ஆரம்பத்தில் இருப்பவரால் மட்டும்தானே விலக்க முடியும்? அல்லது நீங்களெல்லாம் அங்கே போய் ஏதேனும் யோசனை சொல்கிறீர்களா, தடை நீக்குகிறீர்களா?’’

அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் தயங்கி நின்றார்கள். ‘‘இந்த நிர்க்கதியில், இந்தப் பகுதியில் இருக்கும் நாம் என்னதான் செய்ய முடியும்? யாரோ எங்கோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக நாம் ஏன் நமக்கே கோபம் என்ற தண்டனையை நமக்கே கொடுத்துக்கொள்ள வேண்டும்? அமைதியாக இருங்கள். முன் பகுதியில் உள்ளவர்களும் அவரவர் பணிகளை கவனிப்பதற்காகப் போகவேண்டியவர்கள்தான். ஆகவே அவர்கள் விரைவில் ஒரு தீர்வு காண்பார்கள்.

அதுவரை அவ்வாறு தீர்வு கிட்ட நாம் இறைவனை பிரார்த்திப்போம். நம் பிரார்த்தனையால் இறைவன் கருணை அவர்களை எட்டி, யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் தீர்வு காண உத்திகளை வழங்கும்,’’ என்று அவர்களை ஆறுதல்படுத்தினார் அவர்.எந்தச் சூழ்நிலையிலும் பதட்டப்படாமலிருக்கும் அரிய குணம் கொண்டவன்தான் ஞானி. அவன், தான் பரிசுத்தமாக இருப்பதோடு பிறரையும் பரிசுத்தவான்களாக்கி விடுகிறான்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post கங்கையில் கரையும் அசுத்தங்கள் என்னவாகின்றன? appeared first on Dinakaran.

Tags :
× RELATED தயாமூலதன்மம்