×
Saravana Stores

சதுர்ஸாகர யோகம்

வாழ்வில் சில மனிதர்களை காணும் பொழுது அவர்களின் செயல்பாடும் சுறுசுறுப்புத் தன்மையும் ேசாம்பல் இல்லாத வாழ்வும் வாடாமுகமும் உற்சாகம் ததும்பும் பேச்சுகளும் நமக்கு நேர்மறையான சிந்தனையைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நபர்களை நாம் பார்க்க முடியுமா? என்ற ஏக்கம் நம் எல்லோருக்கும் இருக்கும். அவர்களைக் கண்டால் ஆச்சர்யங்கள் ஏற்படும். எப்படி இவர்களால் மட்டும் அனைத்தும் சாத்தியமாகிறது என்ற வியப்பு உண்டாகிக்கொண்டே இருப்பது இயல்புதான். அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் கிரகங்கள் தருகின்ற அளப்பரிய யோகத்தை உணரலாம். அப்படிப்பட்ட சாகஸம் செய்யும் யோகம்தான் சதுர்ஸாகர யோகம் என்பதாகும். இந்த யோகத்தை இந்திரனுக்கு இணையான யோகம் என்றும் பிரம்மனுக்கு இணையான யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் வியப்பாகச் சொல்கிறது. கிரகங்களின் இணைவுகளும் கிரகங்களின் அமைப்புகளும்தான் யோகத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு ஏற்படுத்தும் அமைப்புகளைப் பிரித்தறிவதே ஜோதிடத்தின் ரகசியம்தான்.

சதுர்ஸாகர யோகம் என்றால் என்ன?

சதுர் என்பது நான்கு கோணங்கள் என்ற சதுரத்தை குறிப்பதாகும். ஆம், ஸாகரம் என்பது கடலை போன்ற பெரிய அளவினை குறிப்பதாகும். நவகிரகங்கள் அனைத்தும் கேந்திரங்கள் என்று சொல்லக்கூடிய சதுரக் கோணமாகிய லக்னம் என்று சொல்லக்
கூடிய ஒன்றாம் பாவகம் (1ம் பாவகம்), வித்தைஸ்தானம் என்று சொல்லக்கூடிய நான்காம் பாவகம் (4ம் பாவகம்), சப்தமஸ்தானம் என்று சொல்லக்கூடிய (7ம் பாவகம்), கர்ம ஸ்தானம் / தொழில் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாம் பாவகம் (10ம் பாவகம்) ஆகிய இந்த நான்கு பாவகத்திற்குள் மட்டும் அனைத்துக் கிரகங்களும் அடைபட்டு இருந்தால், அதற்கு சதுர்ஸாகர யோகம் என்று பெயராகும்.

சதுர்ஸாகர யோகத்தில் வெவ்வேறு அமைப்புகள்

லக்னங்கள் ராசித் தத்துவத்தின் அடிப்படையில் மூன்று வகையாக உள்ளன. சரம், ஸ்திரம், உபயம் என்பதாகும். இதில், சர லக்னங்களை (மேஷம், கடகம், துலாம், மகரம்) அடிப்படையாகக்கொண்ட சதுர்ஸாகர யோகம் மிகப் பெரும் யோகமாகவும் எல்லா யோகங்களையும் வாரி வழங்கும் தன்மை உடையதாக சொல்லப்படுகிறது. ஸ்திர லக்னங்களை (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) அடிப்படையாகக்கொண்ட சதுர்ஸாகர யோகம் இரண்டாம் நிலை தன்மை உடைய யோகமாக சொல்லப்படுகிறது. உபய லக்னங்களை (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) அடிப்படையாகக் கொண்ட சதுர்ஸாகர யோகம் மூன்றாம் நிலை தன்மை கொண்ட யோகமாக சொல்லப்படுகிறது.

சதுர்ஸாகர யோகத்தின் முக்கியமான விதி

எல்லா கிரகங்களும் இந்த கேந்திர ஸ்தானங்களில் அடைபட்டு இருந்தாலும் சாயா கிரகங்களைத் தவிர எந்த கிரகமும் வக்கிரம் பெறுதல் கூடாது. அவ்வாறு வக்கிரம் பெறுவது பலன்களை மாற்றி மாற்றித் தரும் தன்மை உடையதாக இருக்கும் என்பதாகும்.
இதில், சந்திரன், சூரியன் ஆகிய ஒளிக் கிரகங்கள் சாயகிரகங்களுடன் இணையாமல் இருப்பதும் சிறப்பாகும். ஒளித் தன்மையுடைய கிரகங்கள் சாய கிரகங்களுடன் இருக்கும் பலன்களின் அளவீடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சதுர்ஸாகர யோகத்தின் வேறு வகைகள்

முதன்மையானதாக லக்னத்தை அடிப்படையாகக் கொண்ட சிறப்பானதாக சொல்லப்பட்டாலும், சிலருக்கு லக்னத்திற்கு இரண்டாம் (2ம்) பாவகம், ஐந்தாம் (5ம்) பாவகம், சப்த ஸ்தானமாக (8ம்) பாவகம், லாப ஸ்தானமான (11ம்) பாவகம் அமைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதனை தன – சதுர்ஸாகர யோகம் என்று சொல்லப்படுகிறது.இன்னும், சிலருக்கும் லக்னத்திற்கு மூன்றாம் (3ம்) பாவகம், ஆறாம் (6ம்) பாவகம், ஒன்பதாம் (9ம்) பாவகம், பன்னிரெண்டாம் (12ம்) பாவகம் ஆகியவற்றில் அமைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதனை தைர்ய – சதுர் ஸாகர யோகம் என்று சொல்லப்படுகிறது.

சதுர்ஸாகர யோகத்தின் பலன்கள் என்ன?

* எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் நபர்களாகவும் அவர்
களின் எனர்ஜி எங்கிருந்து கிடைக்கிறது என்ற வியப்பூட்டும் நபர்களாக இருப்பர்.
* எவ்வளவு ஏழ்மையில் பிறந்திருந்தாலும் இவர்களின் உழைப்பாலும் செயல்களாலும் வாழ்வின் மேன்மையான தன்மையை அடைவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது.
* புகழுக்காகவும் சமூகத்தின் அந்தஸ்தை பெற்றவராகவும் இருப்பார்.
* இந்த யோகம் பெற்றவர்கள் ஆராய்ச்சிகளை செய்யும் விஞ்ஞானிகளாகவும் அந்த ஆராய்ச்சிகள் ஆச்சர்யமுட்டும் விஷயங்களை வெளிக்கொண்டு வருவர்.
* இவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய பாக்கியங்கள் யாவும் அந்தந்த குறிப்பிட்ட வயதில் பெறும் அமைப்புடன் பிறந்திருப்பர்.
* அரசனுக்கு நிகரான புகழ் உண்டு. அரசு தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்ட யோகம் பெறும்
அமைப்புகள் உண்டு.
* இங்கு மட்டுமின்றி எந்தத் திசையில் சென்றாலும் வெற்றியைப் பெறும் அமைப்பாக இருக்கும்.
* வெளிநாடு செல்லும் யோக வாய்ப்புகள் உண்டாகும். பல நாடுகளுக்கு செல்லும் அமைப்பும் தொழில்
ஏற்படும் பாக்கியங்களும் கிட்டும்.
* திசா – புத்திகளும் கேந்திரங்களோடு இருப்பதால் அதிக நன்மை செய்யும் அமைப்புகள் உண்டு.
* சிந்தனையும் செயல்பாடும் இவர்
களோடு எப்பொழுதும் வாழ்வின் வளர்ச்சிக்காக இருந்துகொண்டே இருக்கும்.

கலாவதி

The post சதுர்ஸாகர யோகம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தனுசு ராசிக் குழந்தை தங்கப் பிள்ளை