×
Saravana Stores

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடியபோது, எப்போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்” கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந்தேன்… இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து, வீர நாராயண ஏரியில் பாய்ந்து, அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.

அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.
அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு, கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும், நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும், இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன், அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.

ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வடகாவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன் படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் ராஜா தித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்?

74 மதகுகளும் 74 ஆச்சாரியர்களும்

இந்த அத்தியாயத்தின் வீராணம் ஏரி மதுகுகளைப் பற்றிய அற்புதமான வர்ணணையைப் படித்தவுடன், உடனே வீராணம் ஏரியையும், அதன் கரைமேல் அமைந்துள்ள வீரநாராயணப் பெருமாளையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிஞ்சியது. உடனடியாகப் புறப்பட்டேன். வீராணம் ஏரியின் தொடக்க பகுதி காட்டுமன்னார் கோயில் அருகே லால்பேட்டை என்ற ஊரில் அமைந்திருக்கிறது. அங்கே இருந்துதான் கீழணையில் பிரிந்த நீர் வடவாறு வழியே வீராணம் ஏரியில் வந்து விழுகிறது அதன் முடிவு சேத்தியாத்தோப்பு அருகே அமைந்திருக்கிறது. இந்த வீராணம் உபரி நீர், வெள்ளாற்றைக் கடந்து பின்னனூர் அருகே வாலாஜா ஏரியில் விழுந்து, அதிலிருந்து பரவனாறு வழியாக (நெய்வேலி சுரங்க நீரும் இதில் சேரும்) கிழக்கு நோக்கிப் பயணம் செய்து கடலூர் ஆலப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.

அடியேன் அதன் கடைப் பகுதியான சேத்தியாத்தோப்பில் இருந்து ஏரிக்கரை வழியாகப் பயணித்தேன். வலது புறம் ஏரி. இடது புறம் வாழைக் கொல்லை, திருச்சின்னபுரம், கந்தகுமாரன், கொள்ளுமேடு எனப் பற்பல ஊர்கள். எல்லாம் விவசாய நிலங்கள். நெல், வாழை, வெற்றிலைக் கொடி என்று எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருந்தது.
இந்த ஏரிக்கரை நீர் 74 மதகுகள் வழியே பாய்ந்து அற்புதமான விளைச்சலைத் தந்து உயிர்களைக் காப்பாற்றுகிறது. இதை அப்படியே வைணவ தத்துவத்தோடு இணைத்து ஒரு ஸ்லோகம் உண்டு.
“லக்ஷ்மி நாதாக்ய ஸிந்தௌ ஸடரிபுஜலத:

ப்ராப்ய காருண்ய நீரம்
நாதாத்ராவப்யஷிஞ்சத் ததநு
ரகுவராம் போஜசக்ஷுர்ஜராப்யாம்
கத்வாநாம் யாமுநாக்யாம் ஸரிதமத
யதீந்த்ராக்ய பத்மாக ரேந்த்ரம்
ஸம்பூர்ய ப்ராணிஸஸ்யே ப்ரவஹதி
பஹூதா தேஸிகேந்த்ர
ப்ர மௌகை!!’’

லட்சுமிநாதனாகின்ற பெருங்கடலிலே நம்மாழ்வார் என்னும் மேகம் நீரைப் பருகியது அது நாதமுனிகள் என்கிற மலையில் மழையாகப் பொழிந்தது. அந்த மழை நீர் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி ஆகிய இரு அருவிகள் மூலம் ஆளவந்தார் என்னும் பேராற்றை அடைந்தது, அங்கிருந்து பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், திருவரங்கப் பெருமாள் அரையர் என்றும் ஐந்து ஆச்சாரியர்கள் (கால்வாய்கள்) மூலம் எம்பெருமானார் அதாவது ராமானுஜர் என்னும் மிகப் பெரிய ஏரியை அடைந்தது.

அந்த ஏரிதான் வீராணம் ஏரி. அந்த ஏரியிலிருந்து 74 மதகுகள் வழியே நீர் வெளியேறி பயிர்களைக் காத்து, உயிர்களைக் காப்பது போல, ராமானுஜர் 74 மதகுகள் போல 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் ஆன்மிகத்தைப் பொழிந்து உயிரைக் (ஆன்மா) காப்பாற்றினார் என்று ஸ்லோகம் சொல்கின்றது.

வீரநாராயணப் பெருமாள்

இந்த ஸ்லோகம் நினைவில் வர, கடல் போல் பரந்த ஏரியைப் பார்த்துக் கொண்டே காட்டுமன்னார்கோயிலை அடைந்தேன். மதங்க மாமுனிவருக்குப் பெருமாள் சேவை சாதித்து அருளிய இட மாதலால் மதங்காஸ்ரமம் என்னும் பெயர். இது தவிர, மன்யு ஷேத்திரம், ஜல்லிகாவனம், சதூர் சாஸ்திர நிலையம் வீரநாராயணபுரம், வீரநாராயணபுர சதுர்வேதி மங்கலம், வீர நாராயணபுர விண்ணகரம் என்று பல பெயர்கள் உண்டு. கண்டராதித்த சோழன் கால கல்வெட்டில் வீரநாராயண விண்ணகர் என்றும், கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டில் அழகிய மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில். பாஞ்சராத்ர ஆகம தென்கலை சம்பிரதாயத் திருக்கோயில்.

கோயிலுக்கு அண்மையில்தான் குடமுழுக்கு நடந்தேறி இருக்கிறது. அளவான ராஜகோபுரம். உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் கோடி நாமங்களால் கட்டப்பட்ட கோடிநாம ஸ்தூபி தரிசனம் காணலாம். நந்தவனம் உண்டு.உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் பலிபீடம். அதை கடந்து படிகள் ஏறியவுடன் பிரதான சந்நதி வந்து விடுகிறது. உள்ளே காட்டுமன்னார் பெருமாள் அதாவது வீரநாராயணப் பெருமாள் காட்சியளிக்கின்றார். நின்ற கோலத்தில் திருக்காட்சி தருகிறார். தற்சமயம் சுவாமிக்கு தைலக்காப்பு என்பதால், சுவாமியை முழுமையாக தரிசனம் செய்ய முடியாது திரைபோட்டு இருக்கிறது.

அதற்கு முன்னால் உற்சவர் ராஜகோபாலன். அழகான பசு ஒன்று அவன் திருவடியையே பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதக் காட்சி. பசு என்பது ஜீவாத்மாவின் குறியீடு. திருவடி பார்ப்பது சரணாகதியின் அடையாளம். உற்சவர் நல்ல உயரம். தலை சற்று சாய்ந்து புன் சிரிப்போடு இருக்கக் கூடிய கோலம். சுந்தரகோபாலன், காட்டு மன்னனார், செண்பக மன்னனார், அழகியமன்னனார் என்று திருநாமங்கள். ஸ்ரீதேவி பூதேவி தாயார் இருபுறமுமாக காட்சி தரும் அழகு. அடடா… பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

காட்டுமன்னார் என்று இவருக்கு ஏன் பெயர்?

இதை இப்படிச் சுவாரசியமாக சிந்தித்துப் பார்க்கலாம்.

1. வைணவத்தில் ஆசாரிய பரம்பரையை முதல் முதலில் காட்டித் தந்தவர் இந்தப் பெருமாள். ஆகையினால் இவருக்கு காட்டும் மன்னனார் என்று பெயர்.

2. ஆசாரியர்கள் முதல் ஆச்சாரியரான நம்மாழ்வாரை வைணவ உலகுக்குக் காட்டிய பெருமாள்.

3. அவர் மூலமாக மறைந்து போன நம்மாழ்வாரின் திருவாய் மொழியை மட்டுமல்லாது, மற்ற ஆழ்வார்கள் பிரபந்தத்தையும் காட்டிய பெருமாள்.

4. அந்த பிரபந்தத்தை பண்ணோடு உரையோடும் காட்டிய பெருமாள்.

5. நாதமுனிகளைக் கொண்டு வைணவ தத்துவங்களை உலகுக்குக் காட்டிய பெருமாள்.

6. நாதமுனிகள் மூலம் எதிர்கால வைணவ ஆச்சாரியரான (பவிஷ்ய ஆச்சாரியர்) ராமானுஜரைக் காட்டிய பெருமாள்.

அதனால்தான் இந்தப் பெருமானை காட்டுமன்னார் என்று அழைத்து, அவர் இருக்கும் திருத்தலத்தை காட்டுமன்னார்குடி என்று அழைக்கிறோம். “குடி’’ என்பது வைணவ வழித்தோன்றல்களைக் குறிப்பது. அந்த வகையில், வைணவக் குடி காட்டுமன்னார்குடியில் அவதரித்த நாதமுனிகளிடம் இருந்துதானே துவங்குகிறது.

நாதமுனிகளும் ஆளவந்தாரும்

பெருமாளுக்கு வலது பக்கம் தாயாரும், இருமருங்கிலும் ஆசாரியார்களான ஸ்ரீமந் நாத முனிகளும், ஸ்ரீ ஆளவந்தாரும், முன் மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமந் மணவாள மாமுனிகளும், ஆழ்வார்களும் சேவை சாதிக்குமாறு சந்நதிகள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த திருத்தலம். ஸ்ரீமந் நாத முனிகளும், ஸ்ரீ ஆளவந்தாரும் பெருமாளுக்கு இரண்டு பக்க மும் இருந்து கொண்டு பெருமாளின் தத்துவ தரிசனத்தைக் காப்பாற்றி வருகின்றனர் என்பது போலவே அமைந்திருக்கிறது. இதற்கு ஒரு ஸ்லோகமும் உண்டு. கூரத்தாழ்வான்
அருளிய அந்த ஸ்லோகம்;

“லட்சுமி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்’’

இதில் லட்சுமிநாதனிடம் (பெருமாளிடம்) தொடங்கிய, குரு பரம்பரை, நாத யாமுன ஆச்சார்யர்களை மத்யமாகக் கொண்டு, என்னுடைய ஆச்சாரியார் வரை உள்ள அத்தனை ஆசாரியர்களையும் நான் வணங்குகின்றேன் என்று பொருள். இந்த ஒரு ஸ்லோகத்தைச் சொன்னாலே, பெருமாளிடம் ஆரம்பித்து, இப்பொழுது உள்ள ஆசாரியர் வரை உள்ள அத்தனை ஆசாரியர்களையும் சொன்னது போல ஆகிவிடும்.

“லட்சுமி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்” என்பதை சற்று மாற்றிச் சிந்தித்தால், அந்தக் கோயிலில் உள்ள திருக்காட்சி அப்படியே கண்ணுக்கு வரும். பெருமாள் ஆதியாகவும் (துவக்கமாக) நாதமுனிகளும் ஆளவந்தாரும் இடையாகவும் உள்ளது குரு மரபு. இந்த ஸ்லோகத்தில், நாதமுனி யாமுனமுனி (ஆளவந்தார்) இடையிலே லட்சுமி நாதன் (பெருமாள்) இருப்பதாக அர்த்தத்தை சற்று மாற்றிச் சிந்தித்தால் அதை அப்படியே கருவறைக் காட்சியாக காட்டு மன்னார் கோயிலில் காணலாம். ஒரு பக்கம் நாதமுனி. ஒரு பக்கம் யாமுன முனி (ஆளவந்தார்) நடுவிலே மூலஸ்தானத்தில் பெருமாள்.

நரசிம்மர் சந்நதி, வராகர் சந்நதி, ராமர் சந்நதி, சேனை முதலியார் சந்நதி, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் சந்நதிகள் உண்டு. ஆளவந்தார் சந்நதி வழியாக வெளியே வந்தால், தனிக்கோயிலில் நாச்சியார் சந்நதி. மூலவருக்கு மரகதவல்லி தாயார் என்றும், உற்சவருக்கு செண்பகவல்லி தாயார் என்றும் திருநாமம். அதி அற்புதமாக காட்சி தருகிறார்.
அவரை வணங்கிவிட்டு பிராகாரம் வலம் வந்தால், மதங்கமா முனிவருக்கு தனிச் சந்நதி இருக்கிறது. அதற்கடுத்து, ஆண்டாள் நாச்சியாருக்கு சந்நதி உண்டு. யாகசாலை, வாகன மண்டபம் ஒரு பக்கம், மடைப் பள்ளி என்று சுற்றிக் கொண்டு வந்தால், தொடங்கிய இடத்திற்கே வந்து கொடிமரத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு, வெளியே வந்துவிடலாம். நீங்கள் அவசியம் சேவிக்க வேண்டிய தலம் இது. பெருமாள் அருளோடு ஆச்சார்ய அனுக்கிரகமும் கிடைக்கும் அல்லவா!

1. ஆழ்வார்கள் பாசுரம் பாடவில்லை எனினும் திருமங்கை ஆழ்வார் தமது திருநெடுந்தாண்டகத்தில் குணபால மதயானை என்று இந்த ஊர் பெருமாளைப் பாடுவதாக பெரியோர்கள் கூறுவர்.

2. சோழன் காலத்தில் தனது வெற்றிக்காக ஒரு ஏரியை வெட்டி காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்தான். பெருமாள் பெயரில் இந்த ஏரி வீரநாராயணப் பெருமாள் ஏரி என்று இருந்து இப்பொழுது வீராணம் ஏரி ஆகியது.

3. காலத்தால் மறைந்து போன நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் 12 ஆழ்வார்களின் பாசுரங்களை தேடி கொடுத்தவர் நாதமுனிகள். அவர் அவதரித்த தலம். இத்தலம் அருகில்தான் சைவத் திருமுறைகளை தொகுத்த நம்பியார் நம்பி அவதாரத் தலமும் (திருநாரையூர்) அருகே உள்ளது.

4. சிதம்பரம், கும்பகோணம் ஊர்களிலிருந்தும் செல்லலாம். சென்னை, கும்பகோணம் நெடுஞ்சாலையில் மீன்சுருட்டிக்கு இடது புற சாலையில் திரும்பினால் 4 கி,மீ தூரத்தில் இத்தலம் அமைந்திருக்கிறது.

5. உற்சவங்கள்

*சித்திரையில் ராமானுஜர் உற்சவம் பத்து நாள் பிரம்மோற்சவம்.

* வைகாசியில் 5 நாள் நம்மாழ்வார் உற்சவம்.

* ஆனியில் பத்து நாள் நாதமுனிகள் உற்சவம்.

* ஆடியில் பத்து நாள் ஆளவந்தார் உற்சவம்.

* ஆவணியில் ரோகினி அஷ்டமியில் ஸ்ரீஜெயந்தி, உரியடி.

* புரட்டாசியில் நவராத்திரி உற்சவம் 9 நாட்கள்.

* ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம்.

* கார்த்திகையில் கைசிக ஏகாதசி திருமங்கை ஆழ்வார் உற்சவம்.

* மார்கழியில் பகல் பத்து, ராபத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம்.

* போகி ஆண்டாள் திருக்கல்யாணம்.

* தை மாதம் கனு பார்வேட்டை உற்சவம்.

* மாசி மகம்.

* பங்குனி உத்திரம்.

* பௌர்ணமி ஆண்டு முழுதும் விசேஷமானது

தரிசன நேரம்:- காலை 07:30 – 12:00 மாலை 05:00 – 08:30 வரை. (திருவிழா நாட்களில் மாறுதலுக்கு உட்பட்டது)

முனைவர் ஸ்ரீராம்

The post காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்! appeared first on Dinakaran.

Tags : Veera Narayana ,
× RELATED சதுர்ஸாகர யோகம்