சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் பாஜ மையக்குழு இன்று கூடுகிறது. அண்ணாமலை தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பாஜ தலைமையில் மெகா கூட்டணி மக்களவை தேர்தலை சந்தித்தது. ஆனால் படுமோசமாக தோல்வியடைந்தது. வாக்கு சதவீதமும் குறைந்தது. இது பாஜ மேலிட தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக தமிழக பாஜ மையக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்படுகிறது. மேலும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கையாக தயாரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்ப தமிழக பாஜ தலைமை முடிவு செய்துள்ளது.
The post நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி சென்னையில் பாஜ மையக்குழு இன்று கூடுகிறது: அண்ணாமலை தலைமையில் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.