×

கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு: கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப் கொண்டு இரு தரப்பினர் மோதல்

புழல்: கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் ஸ்ெடம்பு மற்றும் மட்டையால் மற்றோரு குழுவினரை தாக்கிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புழல் பாலாஜி நகர் அருகே உள்ள வெஜிடேரியன் நகரில் காலி வீட்டுமனை இடங்கள் உள்ளது. இங்கு மாதவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(25), ஜஸ்டின் தாமஸ்(26), கார்த்திகேயன்(26) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்பொழுது, அங்கு வந்த புழல் கதிர்வேடு பகுதியை சேர்ந்த காமேஸ்வரன்(24), ராகுல், இன்பரசு, முகிலரசன் ஆகிய குழுவினர்களும் அங்கு கிரிக்கெட் விளையாட வந்திருந்தனர். இந்நிலையில், இது எங்கள் ஏரியா நாங்கள் இங்கு விளையாடும் இடம் இங்கு வந்து விளையாட யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என சொல்லி அவர்களை வெளியேறிச் செல்லுமாறு கூறினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதுவே கைகலப்பாக மாறியது.

இதில் மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிரிக்கெட் மட்டையாலும், ஸ்டம்ப்பினாலும், புழல் கதிர்வேடு பகுதியை சேர்ந்த காமேஸ்வரன், ராகுல், இன்பரசு, முகிலரசன் ஆகியோரை சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த சதீஷ்குமார், ஜஸ்டின் தாமஸ், கார்த்திகேயன் ஆகிய மூவரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் நடத்திய விசாரணைக்கு பிறகு புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு: கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப் கொண்டு இரு தரப்பினர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Vegetarian Nagar ,Puzhal Balaji Nagar ,Madhavaram ,Dinakaran ,
× RELATED ரவுடி திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல்!