×

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நிலஅபகரிப்பு புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்த புகாரின் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் கேட்டு, கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. 2 முறை ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார். அவர் காஷ்மீரில் பதுங்கி உள்ளதாகவும், பஞ்சாப்பில் பதுங்கி உள்ளதாகவும் கரூர் மாவட்ட அதிமுகவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து கரூர் நகர போலீசார் வழக்கு தொடர்பான கோப்புகள், திரட்டிய தகவல்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் கட்சியினர் வருகை இல்லாமல் கடந்த சில நாட்களாக கரூர் மாவட்ட அதிமுக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

The post ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா? appeared first on Dinakaran.

Tags : Karur ,CBCIT ,M.R.Vijayabaskar ,Kashmir ,CBCID police ,minister ,MR Vijayabaskar ,Karur District Melakarur ,Sub-Registrar ,Mohammad Abdul Qader ,Karur City Police ,CBCID ,Vijayabaskar ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர்...