×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புழல்: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 22 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் உள்ளிட்டோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட தலைமை செயலக குடியிருப்பு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஓட்டேரியை சேர்ந்த பிரசாந்த்(24), புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சையத்(24), நரேஷ்குமார்(24), அரும்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த விக்கி (எ) க்ரைம் விக்கி(25), கொடுங்கையூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த அரவிந்தன்(24), சைதாப்பேட்டை பகுதியில் கவுதம் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய தேனாம்பேட்டையை சேர்ந்த ராஜா (எ) ராஜாபாய்(28), தி.நகரை சேர்ந்த சுரேஷ்(27), பிரதீப்(26), மணிகண்டன்(30), கண்ணகி நகரை சேர்ந்த சுகுமார்(22)

மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மாங்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் (33), டி.பி.சந்திரம் பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய ஓட்டேரியை சேர்ந்த சதீஷ்குமார்(21), எம்.கே.பி.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜிவ் (எ) ராஜிவ்பாய்(25), கோயம்பேடு பகுதியில் முகமது ஆதாம் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய நெற்குன்றத்தை சேர்ந்த வெள்ளை செல்வா(23) என கடந்த 10ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 22 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் கைது
சென்னையில் போதை பொருட்களுக்கு எதிராக பெருநகர காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் சென்னை முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, 1,184 போதை மாத்திரைகள், 8 கத்திகள், 7 சல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக தண்டையார்பேட்டை காவல் எல்லையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கார்கில் நகரை சேர்ந்த கார்த்திக் (எ) புறா கார்த்திக்(25), வள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் கரீம்(25), செங்குன்றம் கோமதி அம்மன் நகரை சேர்ந்த ஜோசப் (எ) தினேஷ்(27) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தி.நகர் நடேசன் பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த செங்குன்றம் ஆதாம் தெருவை சேர்ந்த சுப்பிரமணி(48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chennai ,
× RELATED அரசு பள்ளிகளில் மாணவர்கள் யோகா பயிற்சி