×
Saravana Stores

மாநில கல்வி கொள்கைக்கு ஏற்றார்போல் மருத்துவ படிப்பு நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி

அரக்கோணம்: நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லாததது. மாநில கல்வி கொள்ளைக்கு ஏற்றார்போல் மருத்துவ படிப்பு இருக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் பாமக நிர்வாகியின் திருமணம் நேற்று நடந்தது. இதில், பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றோம். இருப்பினும் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

மக்கள் தீர்ப்பை நாம் ஏற்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெறுவது உறுதி. இதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாமக நிர்வாகிகள் 2 வாரம் விக்கிரவாண்டி தொகுதியில் தங்கி பாமக வெற்றிக்காக பாடுபட வேண்டும். அப்போது, 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எடுத்துக் கூறவேண்டும். வரும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம். அதில், பாமக அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சி அமையும். நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லாதது. நீட் தேர்வில் குளறுபடிகள் நடப்பது தெரிய வருகிறது. அந்தந்த மாநில கல்வி கொள்கைக்கு ஏற்றார்போல், மருத்துவ படிப்பினை படிக்க வேண்டும். நீட் தேர்வு பயிற்சி மையங்களால் பல லட்சம் கோடிகள் சம்பாதிக்கும் வியாபாரமாக மாறி வருகிறது. நீட் தேர்வால் சமூக நீதி இல்லை. எப்போதுமே பாமக நீட் தேர்வை வேண்டாமென வலியுறுத்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும்’ என்றார்.

The post மாநில கல்வி கொள்கைக்கு ஏற்றார்போல் மருத்துவ படிப்பு நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Atarbol ,Bhamaka ,Thakola, Ranipettai district ,Arakkonam ,Bamaka ,
× RELATED கால்பந்து திடல்களை தனியாரிடம்...