×

நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு வாரன்ட்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காத வழக்கில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியானது. ஒப்பந்தப்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 30 லட்சம் ரூபாயை வழங்கவில்லை, 27 லட்சம் ரூபாய் டி.டி.எஸ். வரி செலுத்தப்படவில்லை, பட வெளியீட்டுக்காக பெற்ற 35 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை எனக் கூறி பட தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மொத்தமாக 65 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்க வேண்டும். ரூ.27 லட்சத்தை டி.டி.எஸ். வரியாக வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தொகையை வழங்காததால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு சொந்தமாக எந்த சொத்துகளும் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாகக் கூறி தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு வாரன்ட்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Arvindsamy ,Chennai ,Madras High Court ,Bhaskar ,Rascal ,Arvind Sami ,Aravindsamy ,Dinakaran ,
× RELATED 1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை...