×

மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, 14வது மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக மடிப்பாக்கத்தின் அனைத்து சாலைகளுமே முழுமையாக தோண்டப்பட்டன. இதுதவிர சாலை ஓரங்களில் கால்வாய்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதன் காரணமாக, பெரியார் நகர், ராஜராஜேஸ்வரி நகர், எல்ஐசி நகர், ராம்நகர் விரிவாக்கம், ராம்நகர் தெற்கு, டாக்டர் அம்பேத்கர் சாலை, லட்சுமி நகர், குபேரன் நகர், மடிப்பாக்கம் பேருந்து நிலைய சுற்றுவட்டார பகுதிகள் என முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. குறிப்பாக, மடிப்பாக்கம் பிரதான சாலையையும், பள்ளிக்கரணை சுண்ணாம்பு கொளத்தூரையும் இணைக்கும் டாக்டர் அம்பேத்கர் சாலை முழுமையாக சேதமடைந்து பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது.

சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. தினசரி ஏராளமான ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, லட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குபேரன் நகர், எல்ஐசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மடிப்பாக்கம் பஸ் நிலையம், கடைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்துவதால் எப்போதுமே போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சூழலில், இந்த சாலை மிக மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சேற்றிலும், பள்ளத்திலும் சிக்கி அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை, மாலை நேரத்தில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல், பெரியார் நகர், குபேரன் நகர் மண்ணடி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.

பல இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் இதுவரை சாலைகள் சீரமைக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. தற்போது, அடிக்கடி மழை பெய்து வருவதால், சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி சகதியாக மாறுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. பல இடங்களில் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலை பள்ளத்தில் சிக்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து, சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதாகவும், பெரிய மழை வருவதற்குள் சாலை அமைக்கவிட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madipakkam ,CHENNAI ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED நாய்கடி பிரச்னை தொடர்பாக...