×

போர் அமைச்சரவையை கலைத்தார் நெதன்யாகு

டெல் அவிவ்: இஸ்ரேலில் ஆளும் கூட்டணியில் இணைந்த எதிர்க்கட்சி தலைவர் பென்னி காண்ட்ஸி விலகியதைத் தொடர்ந்து போர் அமைச்சரையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய போது பிரதமர் நெதன்யாகுவின் நீண்டகால அரசியல் எதிரியான எதிர்க்கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ் தங்கள் ஒற்றுமையை காட்ட நெதன்யாகு அரசுடன் இணைவதாக அறிவித்தார்.

போர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க நெதன்யாகு, காண்ட்ஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் காலன்ட் உள்ளிட்ட 6 பேர் கொண்ட போர்க்கால அமைச்சரவை உருவாக்கப்பட்டது. இதற்கிடையே நெதன்யாகு போரை கையாண்ட விதத்தில் ஏற்பட்ட விரக்தியை காரணம் காட்டி இம்மாத தொடங்கத்தில் காண்ட்ஸ் அரசிலிருந்து வெளியேறினார். போர் அமைச்சரவையில் தீவிர வலதுசாரிகளை ஓரங்கட்ட வேண்டுமென காண்ட்ஸ் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது போர் அமைச்சரவையை நெதன்யாகு கலைத்து விட்டதாகவும், போர் தொடர்பான விஷயங்களை அரசில் தனக்கு நெருக்கமான சிலருடன் நெதன்யாகு ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹமாஸ் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக போர்நிறுத்தத்தை கொண்டு வரும் ஒப்பந்தத்தை எதிர்க்கும் சிலர் நெதன்யாகுவின் போர்க்கால முடிவுகளை எடுப்பதில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க ஆதரவாக அவர்கள் குரல் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதை மறுத்த நெதன்யாகு, நாட்டின் நலன்களை மனதில் வைத்தே போர்க்கால முடிவுகளை எடுப்பதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

 

The post போர் அமைச்சரவையை கலைத்தார் நெதன்யாகு appeared first on Dinakaran.

Tags : Netanyahu ,Tel Aviv ,Benjamin Netanyahu ,Benny Gantz ,Israel ,Hamas ,Gaza ,Dinakaran ,
× RELATED காசாவில் உள்ள பள்ளியை குறிவைத்த...