×

‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ மூலம் 43 லட்சம் பள்ளி மாணவிகள் பயன்: பொதுமக்களிடையே வரவேற்பு

இந்தியாவில் கல்வி, அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும், பெண்கள் சார்ந்த முன்னேற்றம் என்பது மெதுவாகவே உள்ளது. குறிப்பாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வில் பின்தங்கி இருக்கிறது. அதுவும் கிராமப்புறங்களில் நிலவும் சில மூடநம்பிக்கைகளால் சிறுமிகள், பெண்கள் மத்தியில் இது குறித்த புரிந்துணர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். பெண்களுக்கு பொதுவாக 25-28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுகிறது. மாதவிடாயின் போது மூடநம்பிக்கை, கட்டுக்கதை காரணமாக பல்வேறு விதமாக மனஉளைச்சலுக்கு பெண்கள் செல்கின்றனர். மேலும் சில கிராமப்புறத்தில் தவறான புரிதல் காரணமாக மாதவிடாய் காலத்தில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்திக்கொள்கின்றனர். தேசிய சுகாதார குடும்ப ஆய்வின்படி, 5ல் 1 குழந்தையை மாதவிடாய் காரணமாக பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுகின்றனர். மற்றொரு புறம், மாதவிடாயின் போது முறையாக விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், குடும்பத்தின் வறுமை காரணமாகவும் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தாமல் இன்னும் துணிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

துணிகள் அல்லது ஒரே சானிட்டரி நாப்கின் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் சிறுநீர் தொற்று, பூஞ்சை தொற்று மற்றும் இனப்பெருக்க பாதை நோய்த்தொற்று போன்று பல்வேறு வகையான நோய்களுக்கு இது வழிவகுக்கிறது. எனவே பெண்கள் ஒவ்வொரு 6-8 மணி நேரத்திற்கும் தங்கள் சானிட்டரி நாப்கின்களை மாற்றுவது நல்லது. இதனை கருத்தில் கொண்டு சிறுமியர், மாணவியருக்கு மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருக்க தமிழகத்தில் அரசு சார்பில் ‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ மூலம் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பள்ளிகளில் மாதவிடாய் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில், பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகள் ஆசிரியையிடமும், பள்ளி செல்லாத இளம்பெண்கள் கிராம சுகாதார செவிலியர் அல்லது அங்கன்வாடி பணியாளரிடமும் நாப்கின்களை பெற்றுக் கொள்கின்றனர். இந்த திட்டம் மூலம் வருடத்திற்கு 43 லட்சம் பள்ளி குழந்தைகள் பயனடைவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்த திட்டத்திற்கு பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு 43.3 லட்சம் 10-19 வயது உடைய அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிக்குழந்தைகள் பயன்பெறுகின்றனர். 2 மாதத்திற்கு ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்குழந்தைகள் தவிர அரசு மருத்துவமனையில் உட்புற நோயாளிகளுக்கும், பிரசவம் அடைந்த பெண்களுக்கும் தரப்படுகிறது. இதனை தவிர சிறையில் இருக்கும் பெண்களுக்கும் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படுகிறது. அரசுக்கு தேவையான சானிட்டரி நாப்கின்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் பெறுகிறோம். இதற்காக ஆண்டுக்கு ₹115 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை இலவசமாக வழங்குவது மூலமாக பெண்கள், குழந்தைகள் மாதவிடாயின்போது சுகாதாரமாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ மூலம் 43 லட்சம் பள்ளி மாணவிகள் பயன்: பொதுமக்களிடையே வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : India ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!