×
Saravana Stores

எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்

புதுடெல்லி: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்தைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா என்பது குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான சந்தேகத்தை மீண்டும் கிளப்பி உள்ளன. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை பலமுறை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரம் இன்டர்நெட் மூலம் இணைக்கப்படவில்லை எனவும், அதன் சிப்கள் வாக்குகளை மட்டுமே பதிவு செய்து சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக சில ஆண்டுக்கு முன்பாக, மின்னணு வாக்கு இயந்திரங்களை சோதித்து பார்க்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அப்போது நேரடியாக யாராலும் இயந்திரத்தை ஹேக் செய்ய முடியவில்லை. சமீபத்திய மக்களவை தேர்தலுக்கு முன்பாக கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் கிளப்பிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்ப்பளித்தது. ஆனாலும், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்கிற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

இதற்கு காரணம், டெஸ்லா நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான அமெரிக்காவின் எலான் மஸ்க், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார். பியூர்டோ ரிகோ நாட்டின் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும், அவை மனிதனால் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஹேக் செய்ய முடியும் என மஸ்க் கூறியிருந்தார்.

மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநரான மஸ்க்கின் இந்த பதிவு சமூக ஊடகத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. மஸ்கிற்கு பதிலளித்துள்ள ஒன்றிய முன்னாள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் தளத்தில், ‘‘முற்றிலும் பாதுகாப்பான டிஜிட்டல் ஹார்டுவேரை யாராலும் உருவாக்க முடியாது என்பதைக் குறிக்கும் கூற்று இது. முற்றிலும் தவறு. மஸ்க் கூறுவது, அமெரிக்கா அல்லது பிற நாடுகளுக்கு வேண்டுமானாலும் பொருந்தலாம்.

அங்கு அவர்கள் இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கி வழக்கமான கம்ப்யூட்டர் மூலமாக கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் இந்திய வாக்கு இயந்திரங்கள் பிரத்யேகமானவை. பாதுகாப்பானவை. எந்தவொரு நெட்வொர்க் அல்லது இணைப்பு, ப்ளூடூத், வைஃபை, இன்டர்நெட் போன்ற மீடியாவிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டவை. அதாவது. எந்த வழியாக இவிஎம் இயந்திரத்திற்குள் நுழைய வழி இல்லை. இதை உருவாக்கியவர்களால் கூட செயல்பாட்டை மாற்றியமைக்க முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியா செய்தது போல் கட்டமைத்து உருவாக்க முடியும். இந்த விஷயத்தில் மஸ்கிற்கு பாடம் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என கூறி உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மஸ்க், ‘‘எதையும் ஹேக் செய்யலாம்’’ என கூறி உள்ளார். அதற்கு ராஜீவ் சந்திரசேகர், ‘‘தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் சொல்வது சரி.

ஆனால் இந்திய மின்னணு வாக்கு இயந்திரங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அவை ஓட்டு சீட்டு முறையை விட பாதுகாப்பானவை’’ என கூறி உள்ளார். இதற்கு பலரும் ஆதரவாகவும் எதிர்த்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்திய மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா என சாமானியர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டுமென குரல் கொடுத்துள்ளன.

* இவிஎம்-ஐ செல்போன் மூலம் கட்டுப்படுத்தலாமா?
இந்த விவகாரத்திற்கு நடுவே, மும்பையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்கு வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைகர் வெற்றி பெற்ற விவகாரத்தில் பெரும் தில்லுமுல்லு வெளியாகி உள்ளது. வைகரின் உறவினர்கள் மங்கேஷ் பண்டில்கர், தினேஷ் கவுரவ் இருவரும் தேர்தல் ஆணையத்தின் இணையதள ஆபரேட்டர்களாக இருந்தனர். வாக்கு எண்ணிக்கை நடந்த கடந்த 4ம் தேதி நெஸ்கோ வாக்கு எண்ணும் மையத்தில் இவர்கள் அவர்களது செல்போன் மூலம் ஓடிபி பெற்று இவிஎம்-ஐ அன்லாக் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை கைப்பற்றி அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதன் மூலம் இவிஎம்களை செல்போன் மூலம் கட்டுப்படுத்த முடியுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது ஹேக் செய்வதை விட மிகவும் சுலபமான மோசடி என சமூக ஊடகங்களில் மக்கள் பலரும் கூறுகின்றனர். இந்த செய்தியின் புகைப்படத்தை பதிவிட்டு ‘இதற்கு ராஜீவ் சந்திரசேகர் என்ன பதில் சொல்வார்?’ என கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்திற்கு ராஜீவ் சந்திரசேகர் எந்த பதிலும் கூறவில்லை.

* ‘கருப்பு பெட்டி இவிஎம்’ ராகுல் காந்தி விமர்சனம்
எலான் மஸ்க் மற்றும் மும்பை சிவசேனா வேட்பாளர் வெற்றி குறித்த சர்ச்சை செய்தி இரண்டையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து மிகுந்த கவலைகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், யாரையும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படாத மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்தியாவின் கருப்பு பெட்டிகளாக இருக்கின்றன. அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும் போது ஜனநாயகம் சீர்குலைந்து விடும்’’ என கூறி உள்ளார்.

* பாஜ ஆதரிப்பது ஏன்?
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இவிஎம் மோசடிக்கான அபாயம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். எனவே, எதிர்கால தேர்தல்கள் ஓட்டுச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டுமென நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த விஷயத்தில் இவிஎம்களை பாஜ மட்டும் தொடர்ந்து ஆதரித்து வருவது ஏன்?’’ என்றார்.

* அரசியல் நாடகம்
ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி கூறுகையில், ‘‘மின்னணு வாக்கு இயந்திரம் மீது சந்தேகம் கிளப்புவது எதிர்க்கட்சிகளின் பொழுதுபோக்கு. அவர்கள் அதிகமான இடங்களில் வென்றால் அதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். தேர்தல் முடிவு எதிராக வரும் போது வாக்கு இயந்திரத்தின் மீது பழி போடுவார்கள்’’ என்றார்.

* மும்பை தேர்தல் அதிகாரி மறுப்பு
இவிஎம்கள் செல்போனுடன் இணைக்கப்பட்டிருப்பதாக செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி நேற்று மறுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘இவிஎம் ஒரு தனியான அமைப்பு, அதை அன்லாக் செய்ய ஓடிபி எதுவும் தேவையில்லை. அவதூறு மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் 499, 505 பிரிவுகளின் கீழ் சம்மந்தப்பட்ட நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

The post எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள் appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,New Delhi ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்கிற்கு அடித்த ஜாக்பாட்.....