×

நீட் முறைகேடு பற்றி நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு கபில் சிபல் வலியுறுத்தல்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து கட்சிகளும் வலுவாக குரல் எழுப்ப வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி, கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்னைகளை பூதாகரமாக்கி உள்ளன.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக கபில் சிபல் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், “நீட் தேர்வு முறைகேடுகள் தேசிய தேர்வு முகமையின் ஊழலை வௌிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. குஜராத்தில் நீட் தேர்வில் பதில் எழுதி தருவதாக கூறி பல கோடி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது தேசிய அளவில் வேதனை தரும் விஷயமாக உள்ளது. இதுகுறித்த கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகமை உரிய பதிலளிக்க வேண்டும்.

மேலும் நீட் தேர்வு முறைகேடு ஊழல் குஜராத் மாடலில் வௌிப்படையான ஊழல். ஊழல் செய்வதில் குஜராத் முற்போக்கான மாநிலமாக தெரிகிறது. ஒரு மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் நீட் தேர்வுகளில் ஊழல்கள் நடந்துள்ளன. நீட் தேர்வில் 67 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் வினாத்தாள் கசியவில்லை, எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சொல்லும் கல்வி அமைச்சர் வருத்தப்பட வேண்டும். பாஜ அரசாங்கத்தில் எப்போதும் தவறு நடந்ததாக ஒத்து கொள்ளும் அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள்.

நீட் தேர்வு முறைகேடு பற்றி சிபிஐ விசாரணை நடத்தினால் அது நிர்வாகத்தை பாதுகாக்கும் என்பதால் உண்மை வௌிவராது. எனவே உச்ச நீதிமன்றம் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமான அமைப்பு அல்லது அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். பல லட்சம் இளைஞர்களின் வாழ்வை பாதித்துள்ள இந்த பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவாக குரல் எழுப்ப வேண்டும். ஆனால் அதை விவாதத்துக்கு அரசு எடுத்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணம் காட்டி பாஜ அரசு அதை அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.

* மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்
கபில் சிபல் கூறுகையில்“இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகை மற்றும் சிக்கலான சமூக அமைப்பு உள்ளது. எனவே எதிர்காலத்தில் மருத்துவத்துக்கான மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது என்பது பற்றி அனைத்து மாநிலங்களுடனும் ஒன்றிய அரசு கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் முடிவெடுக்க வேண்டும்” என கபில் சிபல் அறிவுறுத்தினார்.

The post நீட் முறைகேடு பற்றி நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு கபில் சிபல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Kapil Sibal ,New Delhi ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றம்...