×

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு 7 லட்சம் பேர் எழுதினர்: தமிழகத்தில் இருந்து 25,000 பேர் பங்கேற்பு, கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதி

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் நடந்த தேர்வில் சுமார் 25 ஆயிரம் பங்கேற்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 21 வகையான பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1056 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து மார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில், சுமார் 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 16ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 79 நகரங்களில் நேற்று தேர்வு நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது. சென்னையை பொறுத்தவரை அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியோ பள்ளி, புரசைவாக்கம் லேடி எம்.சி.டி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோடம்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர் விருகம்பாக்கம், தி.நகர், அயனாவரம், வில்லிவாக்கம், பெரம்பூர் உள்பட 35 இடங்களில் இந்த தேர்வு நடந்தது.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் அதிகமானோர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது. தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடெமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் சர்வீஸ் தேர்வுக்கான ரிசல்ட் 16 நாட்களில் வெளியிடப்பட்டது. அதேபோல தற்போது நடைபெற்றுள்ள முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 2 வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு 7 லட்சம் பேர் எழுதினர்: தமிழகத்தில் இருந்து 25,000 பேர் பங்கேற்பு, கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,India ,Tamil Nadu.… ,IFS ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...