×

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை

வில்லிபுத்தூர், ஜூன் 16: குச்சி முருங்கை சாகுபடி செய்து விவசாயிகள் நிரந்தர வருவாய் ஈட்ட முடியும் என வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் பொதுவாக முருங்கையை விதைகளில் இருந்து இனப்பெருக்கம் செய்துதான் நடவு செய்வார்கள். ஆனால், அனுபவமுள்ள விவசாயிகள், நல்ல காய்ப்பு தரும் முருங்கை மரங்களில் இருந்து, குச்சிகளை வெட்டி எடுத்து நடவு செய்து அதிக மகசூல் பெறுகிறார்கள். இது குச்சி முருங்கை சாகுபடி என்று கூறப்படுகிறது. இந்த நடவு முறையால் உருவான செடிகள் விரைவில் காய்ப்புக்கு வரும். மரம் சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், நட்டு ஒரு ஆண்டில் மரத்தில் காய்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகும். ஒரு ஏக்கரில் இருந்து சுமார் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான மதிப்புள்ள காய்களை எடுக்க முடியும்.

எனவே, முருங்கை பயிரிட விரும்பும் விவசாயிகள் வலுவான காய்ப்புள்ள மரங்களில் இருந்து குச்சிகளை தேர்வு செய்து பயிரிட்டால், தொடர்ந்து அதிக அளவில் காய்கள் கிடைக்கும். பொதுவாக, முருங்கையை பொறுத்தளவில் குறைவான நீர் பாய்ச்சினால் போதுமானது. செலவுகளும் அதிக அளவில் இருக்காது. கூலி ஆட்கள் செலவும் இல்லை. இதுபோன்ற காரணங்களால் முருங்கையில் விவசாயிகள் தொடர்ச்சியாக அதிக லாபம் பெறமுடியும். முருங்கைக்கு சரியான நேரத்தில் போதிய அளவு உரங்களை இட்டு பராமரிப்பதால் கூடுதல் மகசூலை பெற முடியும். முருங்கைக்கு மக்கிய எரு, டிஏபி உரத்தை சரியான அளவில் இடலாம். இது தவிர, தோட்டத்தில் விழும் இலை, சருகுகளை அப்படியேவிட்டு தண்ணீர் தெளித்து வந்தால், நிலம் காய்ந்து போகாமல் இருப்பதுடன் மக்கிய சத்தூட்டமும் மரங்களுக்கு கிடைக்கும்.

வாய்க்கால் முறை பாசனத்தை கடைபிடிக்கும் விவசாயிகள், வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. மரத்தில் பூ வரத்தொடங்கி விட்டால் தண்ணீர் கட்டுவதை நிறுத்திவைத்து, பிஞ்சுவிடத் தொடங்கியுவுடன் தண்ணீர் கட்டும் பணிகளை தொடங்கினால் காய்கள் நீர்ச்சத்துடன் பளபளப்பாகவும் இருக்கும். பூச்சி தாக்குதல்களில் பழ ஈக்களின் குஞ்சுகள் முருங்கையை தின்று சேதப்படுத்தும். இதனை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களை விரைவாக அகற்ற வேண்டும். மானோகுரோடோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற விகிதத்தில் கலந்து மரங்களின் மீது தெளிக்க வேண்டும். மருந்து ெதளிப்பதற்கு முன் இருக்கும் காய்களை பறித்து விட வேண்டும். பூ மொட்டு துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்த பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோர்வாஸ் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, முருங்கை தோட்டத்தில் ஊடுபயிர்களையும் பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் லாபம் பெற முடியும். வெள்ளை பூசணி மற்றும் பாகல் கொடிகளை முருங்கை பயிரிட்டுள்ள நிலத்தில் ஊடுபயிராக பயிரிடலாம். இதன் மூலம் ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் பெறமுடியும். தோட்டக்கலைத்துறை முருங்கை சாகுபடிக்கான இலவச வழிகாட்டடுதல்களை வழங்கி வருகிறது. எனவே விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி கூடுதல் விபரங்களை பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Department of Agriculture ,Horticulture Department ,Dinakaran ,
× RELATED மாவட்ட அளவிலான விவசாயிகள்...