×

பூத் தலைவருக்குகூட தகுதியில்லாதவர் 10 ஓட்டு வாங்க முடியாதவர் மாநில பொதுச்செயலாளரா? பாஜ தொண்டர் குமுறல் ஆடியோ வைரல்

புதுச்சேரி: புதுவையில் 10 ஓட்டு வாங்க முடியாதவர் பொதுச்செயலாளரா என பாஜ தொண்டர் குமுறலுடன் வெளியிட்ட ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் களமிறங்கிய அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் தோல்வியடைந்தார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் தேஜ கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பாஜ மாநில தலைவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில் 10 ஓட்டுகூட வாங்க முடியாதவர் எல்லாம் மாநில பொதுச்செயலாளரா என பாஜ தொண்டர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த உரையாடலில் குமுறலுடன் பேசும் தொண்டர், ‘மோகன்குமார் யார் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்து இவர் கட்சிக்கு வந்து 12 வருடம்தான் ஆகிறது. ஆனால் ரத்தினம் அண்ணன் 30 வருடத்துக்கும் மேலாக கட்சியில் இருக்கிறார். இவர் அறிக்கை விடுவதற்கு என்ன அருகதை இருக்கிறதோ தெரியல.

மோகன்குமாரின் தொகுதி வில்லியனூர். அங்கு 10 ஓட்டுகூட வாங்க முடியாது. பூத் தலைவருக்குகூட தகுதியில்லாதவரை எப்படி மாநில பொதுச்செயலாளராக போட்டனர் என்பது தெரியல. கிருஷ்ணமூர்த்தி காலத்தில் இருந்தே ரத்தினவேலு கட்சியில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில்தான் மோகன்குமார் வந்தார். கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியல. மோகன்குமார் முதலில் கேவிகே ஸ்கூலுக்கு சீட்டு கேட்டு வந்தவர். பழைய நிர்வாகிகள் எல்லாரும் பாஜவில் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள்.

இப்படியே நடந்தால் கட்சி பாதாளத்தில் போய்தான் சேரும். ரத்தினவேலு பற்றி சுற்றறிக்கை அனுப்பியது தவறு. இது மனவருத்தத்தை தருகிறது. பழைய நிர்வாகிகள் எல்லாரையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு மாற்றுக் கட்சிக்காரரை போடுகிறார். பணம், காசு இருக்கிறவர்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். சரியான முறையில் பாஜ தலைமை செயல்படணும். மோகன்குமார் அவர் வசிக்கும் வீட்டின் அருகிலுள்ள பூத்தில் 10 ஓட்டு வாங்க முடியுமா?. ஆடுகிற வரை ஆடட்டும், என பேசும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.இது புதுச்சேரி பாஜ வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பாஜ தலைவரை மாற்ற மாநில செயலாளர் அரை நிர்வாண போராட்டம்
புதுச்சேரி பாஜ மாநில செயலாளரான ரத்தினவேல், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில், மாநில பாஜ தலைவரை மாற்றக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவரை, அக்கட்சியில் இருந்து நீக்கி மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில் புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்பி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜ புதுச்சேரி மாநில செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரத்தினவேல் கட்சியில் நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் அதனையும் மீறி தொடர்ந்து கட்சியின் கோட்பாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் 6 வருடத்திற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனே நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம், என குறிப்பிட்டுள்ளார்.

The post பூத் தலைவருக்குகூட தகுதியில்லாதவர் 10 ஓட்டு வாங்க முடியாதவர் மாநில பொதுச்செயலாளரா? பாஜ தொண்டர் குமுறல் ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : state general secretary ,BJP ,Kumural ,Puducherry ,Puduvai ,general secretary ,Minister ,Namachivayam ,Congress ,Vaithilingam ,Booth 10 ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நூதன போராட்டம்