×

இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு போப் பிரான்சிஸ்சுடன் மோடி சந்திப்பு: அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபருடன் பேச்சு

அபுலியா: ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே போப் பிரான்சிஸ்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 13 முதல் இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் இருந்து அபுலியா சென்றார். மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் ‘ஹொரைசன் 2047’ செயல்திட்டம் மற்றும் இந்தோ-பசிபிக் செயல்திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியா – பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். 2025ம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் ஐநா பெருங்கடல் மாநாடு ஆகியவை தொடர்பாக இருநாடுகளும் இணைந்து பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். பாரீஸில் அடுத்த மாதம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் தொடர்பாக அதிபர் மேக்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடனான பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,’இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூன்றாவது காலத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே விரிவான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். பாதுகாப்புத் துறையில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேசினோம்’என்று தெரிவித்துள்ளார். அதன்பின் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அவரிடம் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதிக்கான வழியை காண முடியும் என்று இந்தியா நம்புகிறது என்று வலியுறத்தினார்.

இந்த மாநாட்டில் முக்கிய அம்சமாக ஜி7 மாநாட்டில் முதல்முறையாக கலந்து கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் போப் பிரான்சிஸ்சை நேற்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருவரும் 2021ம் ஆண்டில் ஏற்கனவே சந்தித்துள்ளனர். நேற்று நடந்த சந்திப்பில் வீல்சேரில் அமர்ந்து இருந்த போப் பிரான்சிஸ்சை பிரதமர் மோடி கட்டியணைத்து தழுவி, கைகுலுக்கினார். அப்போது கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, பின் விளைவுகள் குறித்தும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் குறித்தும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா எடுத்துள்ள லட்சிய முயற்சிகள் குறித்தும், 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்குவதில் இந்தியாவின் வெற்றியைப் பற்றியும் போப்பிடம் பிரதமர் விளக்கினார். தொற்றுநோய் பாதிப்பின் போது தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா செய்த உதவியை போப் பிரான்சிஸ் பாராட்டினார். அந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார். இருவரும் இருநாடுகள் இடையிலான நட்புறவு குறித்து விவாதித்தனர்.

* போப் பிரான்சிஸ்சை வரவேற்க தயார்
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கத்தோலிக்க மக்கள் வசிக்கும் இந்தியாவில் அடுத்த ஆண்டு போப் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்க இந்தியா தயாராக உள்ளதாக மோடி சந்தித்த போது தெரிவிக்கப்பட்டது.

* சீனாவுக்கு வேண்டுகோள்
ஜி7 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரைவு அறிக்கையில், ரஷ்யாவுக்கு ஆயுத உதிரிபாகங்களை அனுப்புவதை சீனா நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரைத் தூண்டும் அணு ஆயுத உதிரிபாகங்களை ரஷ்யாவிற்கு அனுப்புவதை சீனா நிறுத்த வேண்டும் என ஜி7 தலைவர்கள் குழு சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

* ஏஐ தொழில்நுட்பத்தில் எச்சரிக்கை தேவை- போப்
ஜி7 மாநாட்டில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் அவர் பேசுகையில்,’ ஏஐ மனிதனை மையப்படுத்துவதில் முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் மனித முடிவுகள் எப்போதும் மனிதர்களால் எடுக்கப்பட வேண்டும். இயந்திரங்களால் அல்ல. இயந்திரங்களை நம்பியிருப்பதன் மூலம், அதனால் மக்களின் முடிவெடுக்கும் திறனைப் பறித்தால், நம்பிக்கையற்ற மனிதகுலம் உருவாகி விடும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களால் செய்யப்படும் தேர்வுகள் மீது சரியான மனிதக் கட்டுப்பாட்டிற்கான இடத்தை நாம் உறுதி செய்ய வேண்டும். மனித கண்ணியம் அதையே சார்ந்துள்ளது. எனவே ஏஐ மேம்படுத்தப்பட்டு, ஒரு முழு நெறிமுறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய ஒரு சர்வதேச ஒப்பந்தம் செய்ய வேண்டும். இரக்கம், கருணை, ஒழுக்கம் மற்றும் மன்னிப்பு போன்ற மனித விழுமியங்கள் இல்லாத ஒரு தொழில்நுட்பம் சரிபார்க்கப்படாமல் வளர விடுவது மிகவும் ஆபத்தானது’ என்று போப் எச்சரித்தார்.

The post இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு போப் பிரான்சிஸ்சுடன் மோடி சந்திப்பு: அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபருடன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : G7 Summit in ,Modi ,Pope Francis ,US President Biden ,President ,UK ,PM ,Apulia ,G7 Summit ,Emmanuel Macron ,Rishi Sunak ,Italy ,
× RELATED பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள்...