×

வீதிகளுக்கு பெயர் பலகை வைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. மனு

 

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் முதலாம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 9 வீதிகளுக்கு பெயர் பலகை வைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் முதலாம் மண்டல அலுவலகத்திற்கு தெற்கில் காந்தி சாலையின் மேற்கு பகுதியில் 9 வீதிகள் உள்ளன.

இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகளும், பாத்திரப் பட்டறைகள், மருத்துவமனைகள், பனியன் கம்பெனிகள் என உள்ளன. பேரூராட்சியாக இருந்து தற்போது மாநகராட்சியாக விரிவடைந்த பிறகும் காந்தி ரோடு என்று மட்டும் பொதுவாக உள்ளது. அஞ்சல் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் குழப்பம் அடைந்து வருகின்றனர். இதன்காரணமாக, பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதில் தாமதங்களும் குழப்பங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

எனவே மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்திற்கு தெற்கில் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வரை உள்ள 9 குறுக்கு வீதிகளுக்கும் காந்தி சாலை மேற்கு குறுக்கு வீதி 1 முதல் 9 என பெயர் பலகை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், வேலம்பாளையம் நகர செயலாளர் நந்தகோபால், நகர குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன அளித்தனர்.

The post வீதிகளுக்கு பெயர் பலகை வைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. மனு appeared first on Dinakaran.

Tags : Marxist Commune ,Tirupur ,Marxist Communist Party ,Tirupur Municipal Corporation ,Paddarpalayam ,Manu ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்