மங்கலம்பேட்டை, ஜூன் 14:மதுபோதை தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நண்பரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே நண்பரின் தந்தையான ஊராட்சி தலைவர் வீட்டை சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகேயுள்ள மாத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரி மகன் பாக்கியராஜ் (40). இவரும், இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கலைவாணன் என்ற ராம்கி (38) என்பவரும் சில நாட்களுக்குமுன் காலை நேரத்தில் மது குடித்துள்ளனர்.
அப்போது பாக்கியராஜ் வீட்டின் முன் மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலைவாணன் பாட்டிலால் பாக்யராஜின் பின் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் ரத்தக்காயங்களுடன் படுகாயமடைந்த பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கும், பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கலைவாணனை மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதனிடையே பாக்கியராஜ் உறவினர்கள் ஆத்திரமடைந்து கலைவாணனின் தந்தை மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில், வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post மது போதையில் வாலிபர் அடித்து கொலை appeared first on Dinakaran.