×

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி: முதல் பரிசு ரூ.1 லட்சம்

சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞர் அணி சார்பாக, கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த பேச்சுத்திறன் உள்ள புதிய மேடைப் பேச்சாளர்களை அடையாளம் காணும் இந்த போட்டியில், 18 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள், திருநர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். போட்டிக்கு 10 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பங்கேற்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து, அதையொட்டி பேச வேண்டும்.

இந்த போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள், www.kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் உள்ள ‘விண்ணப்பம்’ பகுதியை பூர்த்தி செய்து, வரும் ஜூலை 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘அன்பகம்’, 614, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் ஜூலை 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் முதற்கட்ட தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

முதற்கட்ட தேர்வில் சிறப்பாக பேசி, நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்தகட்டமாக மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள். மண்டல அளவில் சிறப்பாக பேசி தேர்வு செய்யப்படுபவர்கள், இறுதிக்கட்ட போட்டியில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள். இறுதிப் போட்டியில் சிறப்பாக பேசிய மூவர், பரிசுகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களு க்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் தலைமைக் கழகம் அறிவுறுத்தியபடி போட்டியில் கலந்துகொண்டவர்களில் சிறந்த நூறு இளம் பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டிக்கான தலைப்புகள், விதிமுறைகள் ஆகியவற்றை www.kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி: முதல் பரிசு ரூ.1 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Speech Contest ,DMK Youth Team ,Chennai ,Artist Centenary Speech Competition ,DMK ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...