×

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பதிவெண்களை மாற்ற 17ம் தேதி வரை அவகாசம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை வரும் திங்கட்கிழமை (ஜூன் 17) வரை இயக்கவும், பதிவெண்களை மாற்றவும் போக்குவரத்து துறை கால அவகாசம் வழங்கியுள்ளது. அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு (ஏஐடிபி) பெற்று இயங்கும் பல ஆம்னி பேருந்துகள், சுற்றுலா பேருந்துபோல இல்லாமல், வழக்கமான பயணியர் பேருந்துபோல் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இன்று நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் இயங்க போக்குவரத்து ஆணையர் தடை விதித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையரகத்தில், ‘ஏஐடிபி’ ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவகாசம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவெண்களாக மாற்ற வரும் 17ம் தேதி (திங்கட்கிழமை) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு பின் கால அவகாசம் நிச்சயம் நீட்டிக்கப்படாது என்றும், விதிகளை மீறும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பதிவெண்களை மாற்ற 17ம் தேதி வரை அவகாசம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,All India Tourist Permit ,AITP ,
× RELATED பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல்