×

பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 


சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: ஜூன் 14, 15, 16 (வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் 17ம் தேதி (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 545 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை, நாளை மறுநாள் தலா 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி , திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Bakhrit festival series ,Chennai ,Transport Department ,Bakrit ,Managing Director ,State Express Transport Association ,Bakrit Festive Series Holiday ,Buses Operation ,Dinakaran ,
× RELATED பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல்