×

அண்ணாமலைக்கு டெல்லியில் டோஸ்; ஆந்திர முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா: தமிழக பாஜவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம்

சென்னை: தமிழக பாஜவில் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியில் பாஜ மூத்த தலைவர்கள் அண்ணாமலையை எச்சரித்து அனுப்பினர். தற்போது ஆந்திர முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழிசையை அழைத்து அமித்ஷா கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜ படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து, தமிழக பாஜ தலைமையை (அண்ணாமலையை) வெளிப்படையாகவே தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்து வந்தார். இதை தொடர்ந்து தமிழிசை தரப்புக்கும், அண்ணாமலை தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தது.

‘தமிழக பாஜவில் தற்போது குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். நான் தலைவராக இருந்த போது கட்சியில் சேருவதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தேன். இதனால் மிகவும் நேர்மையானவர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படி இல்லை’ என்று தமிழிசை ஒரு குண்டை தூக்கி போட்டார். இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா, ‘உங்கள் காலத்தில் கட்சி வளரவே இல்லை. உங்களின் ஆதரவுடன் தலைவரான எல்.முருகன் காலத்தில் தான் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அதிகம் சேர்க்கப்பட்டனர். எங்கள் மீது நடவடிக்கை பாய்ந்தாலும் சந்திப்போம்’ என்று பதிலடி கொடுத்ததால் கோஷ்டி பூசல் பற்றி எரியத் தொடங்கியது.

உடனே தமிழிசைக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜ மூத்த நிர்வாகி கல்யாணராமன், ‘அண்ணாமலையை தலையில் தூக்கி வைத்து கொண்டாட இரண்டு வார் ரூம்கள் தனியாக செயல்பட்டு வருகின்றன. அதில் உள்ளவர்கள் அமலாக்கத்துறை வழக்குகளில் சிக்கியவர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இப்படியான நபர்கள் இருந்தால் கட்சி எப்படி வளரும்’ என்றெல்லாம் சரமாரியாக விமர்சித்தார்.

தமிழிசை, அண்ணாமலை தரப்புக்கு இடையே மோதல் போக்கு உச்ச கட்டத்தை எட்டியதால், கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தது. இதுகுறித்து தமிழக மேலிட பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், மாநில உயர்மட்ட குழுவினரிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து டெல்லி தலைமையிடம் விளக்கம் அளிக்க தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். அப்போது, அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவரை கடுமையாக திட்டி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோவை திரும்பிய அண்ணாமலை இனி வேறு எங்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அறிவித்தார்.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா, கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், விழா மேடையில் அமித்ஷா மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தார். ஆனால் அமித்ஷா, தமிழிசையை கையை அசைத்து அழைத்தார். உடனே பணிவாக தலைகுனிந்து அவர் அருகே தமிழிசை சென்றார்.

அவரிடம் கடுமையான முகத்துடன் கை விரல்களை நீட்டி கண்டிப்புடன் அமித்ஷா பேசினார். இதற்கு சமாதானம் அளிக்கும் வகையில் தமிழிசை ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் அமித்ஷா அதை கேட்க தயாராக இல்லை. ‘நோ..நோ..’ என்பது போல தலையை ஆட்டி அமித்ஷா மீண்டும் தமிழிசையிடம் மிரட்டும் தொனியில் பேசினார். இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பெண்ணை, முன்னாள் ஆளுநரை பொதுமேடையில் எப்படி அமித்ஷா பகிரங்கமாக கண்டிக்கலாம் என்பது விமர்சனம் வைப்போரின் கருத்தாக உள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அண்ணாமலைக்கு டெல்லியில் டோஸ்; ஆந்திர முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா: தமிழக பாஜவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Amitsha ,AP PM ,Ghoshdi Poole ,Tamil Nadu ,Chennai ,Annamala ,AP ,Annamalai ,PM ,Khoshdi Bhoshal Uchakram ,
× RELATED டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள...