ஜெய்ப்பூர்: சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி அல்ல என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் சுவாலால். கடந்த 1991ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தோடரைசிங் என்பவரின் 6 வயது பேத்தியை இரவு 8 மணி அளவில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சுவாலால் இழுத்துச்சென்றார்.
அங்கு சிறுமியின் ஆடை, உள்ளாடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணமாக்கினார். அப்போது சிறுமி கத்தி கூச்சல் எழுப்பியதால் கிராம மக்கள் ஓடி வந்தனர். அதைப்பார்த்த சுவாலால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பான வழக்கில் டோங்க் மாவட்ட நீதிமன்றம் சுவாலால் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறி தீர்ப்பளித்தது. இதையடுத்து சுவாலால் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அனுப்குமார் தாண்ட் விசாரித்து 33 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு அளித்தார்.
அதில்,’ சிறுமியின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு, நிர்வாணமாக்கியது பலாத்கார முயற்சி ஆகாது. ஆனால் அது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றமாக கருதப்படும். ஏனெனில் சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி முற்றிலும் நிர்வாணப்படுத்துவது, பலாத்கார முயற்சி தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் பிரிவு 511 இன் கீழ் வராது.
பலாத்கார முயற்சி என்றால் குற்றம் சாட்டப்பட்டவர், ஆடைகளை கழற்றியதையும் தாண்டி அப்பால் சென்றிருக்க வேண்டும். அப்படி எந்த நடவடிக்கையும் இந்த வழக்கில் இல்லாததால் இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் ஒரு பெண்ணின் நாகரீகத்தை மீறுதல் என்ற குற்றத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்க முடியும். நீதிமன்றத்தின்படி, பலாத்கார குற்றத்தின் கீழ் எந்த ஒரு செயலையும் தண்டிக்க மூன்று நிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படிகுற்றவாளி முதலில் ஒரு குற்றத்தைச் செய்வதற்கான யோசனை அல்லது நோக்கத்தை வெளிப்படுத்தும் போது முதல் நிலை உள்ளது.
இரண்டாவது கட்டத்தில், அவர் அதைச் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார். குற்றத்தைச் செய்ய குற்றவாளி அத்துமீறி வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்கும்போது மூன்றாவது கட்டத்தை அடைகிறது. பலாத்கார முயற்சி தொடர்பாக குற்றத்திற்காக அது தயாரிப்பு கட்டத்திற்கு அப்பால் சென்றுவிட்டதாக வழக்குத் தொடர வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் 3வது நிலைக்கு சென்று சிறுமியிடம் உறவு கொள்ள முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவர் மீது பதியப்பட்ட பலாத்கார பிரிவுகள் 376, 511ஐ மாற்றி, பிரிவு 354ன் கீழ் அவரின் உள்ளாடைகளை களைந்து நிர்வாணப்படுத்திய குற்றத்திற்காக, மானபங்க செயலாக மாற்றி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
The post உள்ளாடைகளை கழற்றி சிறுமியை நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி அல்ல: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.