×

தேவசம்போர்டு முடிவில் தலையிட முடியாது சபரிமலையில் 10 வயது சிறுமி தரிசனம் செய்ய அனுமதியில்லை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த இளம்பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கேரளாவில் போராட்டம் வெடித்தது. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், இந்து ஐக்கிய வேதி உள்பட இந்து அமைப்பினர் தீவிர போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையே போராட்டம் வலுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் விரிவான பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான இறுதி உத்தரவு இதுவரை வரவில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக முந்தைய கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதி கோரி திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் விண்ணப்பித்தார். ஆனால் அந்த சிறுமியின் கோரிக்கையை தேவசம் போர்டு நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: எனக்கு 10 வயது ஆகிறது. இதுவரை மாதவிலக்கு தொடங்கவில்லை. அனைத்து கட்டுப்பாடுகளையும் மதித்து நான் சபரிமலையில் தரிசனம் செய்ய தயாராக இருக்கிறேன். எனவே 10 வயது என்ற நிபந்தனையை தளர்த்தி என்னை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் ஹரிசங்கர் வி. மேனன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்யக்கூடாது என்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post தேவசம்போர்டு முடிவில் தலையிட முடியாது சபரிமலையில் 10 வயது சிறுமி தரிசனம் செய்ய அனுமதியில்லை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala High Court ,Devasam Board ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan temple ,Supreme Court ,Young Women Lawyers Association ,Delhi ,
× RELATED மலையாள நடிகை பலாத்கார வழக்கு; முக்கிய...