×

மலையாள நடிகை பலாத்கார வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: ஜாமீன் மறுக்கப்பட்ட 3 நாட்களுக்குள் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் 7 வருடங்களாக சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான சுனில்குமாருக்கு கேரள உயர் நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீசார் நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்த சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகையை பலாத்காரம் செய்வதற்கு பிரபல மலையாள நடிகர் திலீப் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறையில் இருந்த நடிகர் திலீப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே நடிகையை பலாத்காரம் செய்யும்போது அந்தக் கும்பல் செல்போனில் அதை வீடியோவாக எடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை கைப்பற்றிய போலீசார் அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஆனால் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மெமரி கார்டை சிலர் திறந்து பார்த்துள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் 3 முறை மெமரி கார்டை திறந்து பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுனில்குமார் தவிர அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 7 வருடங்களாக சிறையில் உள்ள சுனில்குமாருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீன் கோரி 10 முறை கேரள உயர்நீதிமன்றத்திலும், 2 முறை உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். ஆனால் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

மனுவில், கடந்த 7 வருடங்களாக சிறையில் இருக்கும் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். கடந்த மே மாதம் 20ம் தேதி இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சுனில்குமார் சிறையில் இருந்து தான் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால் 23ம் தேதி மீண்டும் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த நீதிபதி, சுனில்குமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் உத்தரவில் கூறி இருப்பதாவது:

ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட 3 நாட்களில் சுனில்குமார் மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து உள்ளார். ஒவ்வொரு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யும்போதும் வக்கீல்களை மாற்றும் அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பது தெரியவில்லை. அவரது பின்னணியில் யாராவது இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே சுனில்குமார் காவலில் தான் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

The post மலையாள நடிகை பலாத்கார வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : KERALA HIGH COURT ,Thiruvananthapuram ,Sunil Kumar ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...