×

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து போலீஸ் எஸ்ஐ காயம்

*நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து போலீஸ் எஸ்ஐ காயம் அடைந்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுமாடு, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதியின் ஒருபுறம் இருந்து மற்றொரு பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி இடம்பெயர்வது வழக்கம். சமீப காலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவு நேரங்களில் கூடுதலாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட் கருப்பன் ஓலை பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் மனோகரன் (52) தற்செயல் விடுப்பு எடுத்து தனது மகன் அன்பரசனுடன் (24) காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். கோத்தகிரி வியூ பாயிண்ட் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே இரு யானைகள் நிற்பதை பார்த்தார்.

இதையடுத்து காரை நிறுத்திவிட்டு அங்கேயே நின்றார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற டூவீலரின் ஹாரன் சத்தத்தால் யானைகள் மிரண்டன. இரு காட்டு யானைகளும் காரை நோக்கி வந்தன. பின்னர் தந்தத்தால் குத்தி காரை கவிழ்த்தன. இதில் கார் கவிழ்ந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மனோகரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அன்பரசன் காயமின்றி தப்பினார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரமாக போராடி இரு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மனோகரனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்பினார். காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து போலீஸ் எஸ்ஐ காயம் appeared first on Dinakaran.

Tags : Police SI ,Mettupalayam-Kothagiri road ,Mettupalayam ,SI ,Mettupalayam, ,Sirumugai forest ,Coimbatore ,Dinakaran ,
× RELATED காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து எஸ்ஐ காயம்