×

குமரி மாவட்ட ஊராட்சிகளை வகை மாற்றம் செய்ய எதிர்ப்பு

*ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் *ஊரக வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்பு

நாகர்கோவில் : குமரி மாவட்ட ஊராட்சிகளை வகை மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள், 51 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சி ஆகியவை உள்ளது. இந்தநிலையில் 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும், 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க இருப்பதாகவும் கூறி ஊராட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பான போராட்டங்கள் நடந்த நிலையில் அவ்வாறு அரசிடம் திட்டம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டதால் போராட்டம் தணிந்தது. இந்தநிலையில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அஜித்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் பி.டி.செல்லப்பன், சதீஷ், முத்துசரவணன், தங்கமலர் சிவபெருமான், ஏஞ்சலின் ஷரோனா, மதியழகன், தாமஸ் கென்னடி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட ஊராட்சி பகுதி பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், ‘பேரூராட்சியாக தரம் உயரும்போது ஒன்றிய அரசு கிராம ஊராட்சிகளுக்கு வழங்குகின்ற சிறப்பு திட்டங்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்றவை கிடைக்காமல் போகும். இதனால் ஊரக வேலை திட்ட வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தற்போது கிராம ஊராட்சிகள் பதவி காலம் வரும் டிசம்பர் மாதம் வரை உள்ளது.

இந்தநிலையில் மாவட்டத்தில் 25 ஊராட்சிகள் பேரூராட்சிகளுடன் இணைக்கப்படும். மேலும் 10 ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சியாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்ட காட்டாத்துறை, வெள்ளிச்சந்தை, விளாத்துறை, மேலச்சங்கரன்குழி, பைங்குளம், ராஜாக்கமங்கலம், தர்மபுரம், மெதுகும்மல், நுள்ளிவிளை, திக்கணங்கோடு, பேச்சிப்பாறை ஆகியன பேரூராட்சிகளாக இருந்து கடந்த 1999ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் கிராம ஊராட்சிகளாக வகை மாற்றம் செய்யப்பட்டவை ஆகும்.

இதில் தற்போது காட்டாத்துறை, வெள்ளிச்சந்தை, விளாத்துறை, மேலசங்கரன்குழி, பைங்குளம், ராஜாக்கமங்கலம், தர்மபுரம், மெதுகும்மல், நுள்ளிவிளை, திக்கணங்கோடு ஆகிய 10 ஊராட்சிகள் மீண்டும் பேரூராட்சிகளாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வகை மாற்றம் செய்ய ஊராட்சிகளில் 60 சதவீதம் மக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே அரசு ஊராட்சிகளை வகை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மேலும் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சிகளை பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

ஊராட்சிகளுக்கு சிறப்பு திட்டங்கள்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம், தோட்டக்கலை வேளாண்மை துறை திட்டங்கள் போன்றவை கிராம ஊராட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுபவை. ஊராட்சிகள் வகை மாற்றத்தால் இவை நிறுத்தப்படும். மேலும் தரம் உயர்த்தப்படும் ஊராட்சிகளில் வீட்டு வரி, நிலவரி போன்றவை உயர்த்தப்படும் நிலை உருவாகும்.

ஊராட்சிகள் குறைந்த மாவட்டம்

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் சேர்த்து 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. இதில் குமரி மாவட்டத்தில்தான் ஊராட்சிகள் எண்ணிக்கை குறைவாக 95 ஊராட்சிகள் உள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் ஊராட்சிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர். பெரும் தொழிற்சாலைகள் இல்லை. எனவே மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post குமரி மாவட்ட ஊராட்சிகளை வகை மாற்றம் செய்ய எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nagercoil ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு