×

சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டுவோம் அண்ணாமலையை மாற்றினால் பா.ஜ.வுடன் அதிமுக கூட்டணியா?

*மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

நாகர்கோவில் : நாடாளுமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. குமரி கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசினார். நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பசிலியான் நசரேத், விளவங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்துக்கு பின், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி இல்லை. 1 கோடி வாக்குகள் பெற்று இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் யார் பிரதமர் என்பதை தீர்மானிக்க நடந்த தேர்தல் ஆகும். காங்கிரஸ் வெற்றி பெற்று விடும் என்று, தமிழக வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து உள்ளார்கள்.

திமுக மீது சவாரி செய்து காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணி இருந்தால், அதிக இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்கிறார்கள். தேர்தல் முடிந்த பின் கருத்துக்கள் சொல்வது அவரவர் கருத்தாகும். முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது போல் அதிமுக, பா.ஜ. கூட்டணி இருந்தால் அதிக இடங்கள் கிடைத்திருக்கும் என்று தான் நானும் கூறுகிறேன். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைமை தான், இந்த கூட்டணி உடைவுக்கு காரணம். சிறுபான்மையினருக்கு அதிமுக பாதுகாப்பான இயக்கம். சிறுபான்மை மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வர விட மாட்டோம்.

அதிமுக செல்வாக்கு இழக்கவில்லை. தற்போது அதிமுகவுக்கு மக்கள் ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் யார் முதலமைச்சர் என்பதற்கான தேர்தல் ஆகும். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறும். அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் தான் இருக்கிறார்கள். அதிமுக நம்பிக்கையுடன், சட்டமன்ற தேர்தல் பணியை தொடங்கி விட்டது. இவ்வாறு கூறினார்.

பொறாமையை கைவிடுங்கள்

இந்த கூட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பலத்துடன் நின்றது. நம் கூட்டணியில் உள்ள தேமுதிக இங்கு அதிகம் இல்லை. இதனால் நாம் பலம் இல்லாமல் தனித்து நின்றோம். நாம் தோற்றது தலைக்குனிவு தான். இதை சரி செய்ய வேண்டும். முதலில் கட்சிக்குள் போட்டி, பொறாமையை கைவிடுங்கள். சாதி பார்க்காமல் கட்சிக்காக உழைக்க வேண்டும். களப்பணி தான் மிகவும் முக்கியமானது என்றார்.

மீண்டும் எழுச்சி பெறுவோம்

முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கையுடன் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களை வாழ்த்துகிறேன். உங்கள் உழைப்பு தொண்டர்கள் மத்தியில் சென்றடைந்து இருக்கிறது. தோல்வியை கண்டு நீங்கள் கலக்கம் அடைய வேண்டாம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போதும் தோல்வி கிடைத்துள்ளது.

ஆனால் தோல்வியை கண்டு அவர் அஞ்சியது இல்லை. தோல்விக்கு அஞ்சும் இயக்கம் அதிமுக அல்ல. எனவே தொண்டர்கள், நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விடுங்கள். மீண்டும் எழுச்சி பெறுவோம் என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் ராஜன், மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன், இளைஞர் பாசறை செயலாளர் அட்சயா கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரபீக், வர்த்தக அணி செயலாளர் நாஞ்சில் சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், வக்கீல்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன், கவுன்சிலர் லிஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டுவோம் அண்ணாமலையை மாற்றினால் பா.ஜ.வுடன் அதிமுக கூட்டணியா? appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,BJP ,minister ,Rajendra Balaji ,Nagercoil ,general secretary ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்:...