×

குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு

*ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் உணவு மற்றும் காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரித்து அதனை மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை நாகர்கோவிலில் நடந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், மார்க்கெட்டுகள், ஹோட்டல்களில் இருந்து வெளியாகின்ற உணவு மற்றும் காய்கறி கழிவுகளை மேலாண்மை செய்வது, அதில் இருந்து எரிவாயு தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அப்டா மார்க்கெட் நிர்வாகிகள், ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டல்களில் இருந்து வெளியேறுகின்ற கழிவுகளை மேலாண்மை செய்வது தொடர்பாக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் எனர்ஜி ஆப் சயின்ஸ் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் 4 நகராட்சிகளின் ஆணையர்கள், மாவட்ட திட்ட அலுவலர் பாபு உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் டேனியல் செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

ஒன்றிய அரசின் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. சுத்தமான, சுகாதாரமான கன்னியாகுமரி மாவட்டம் என்பதுதான் அது. அதற்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவை, அதனை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று கேட்டிருந்தார்கள். அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சாக்கடை கழிவுநீர் இல்லாமல் இருக்க வேண்டும். குடிநீர் சுத்தமாக இருத்தல், நிலவளம் மேம்பட்டு இருக்க வேண்டும், குப்பைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் பசுமை மாவட்டம் மாறிவிடும்.

அதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு உருவாக்கிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. சுசீந்திரத்தில் உள்ள குளம் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த கூட்டம் வரும் 29ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் இயற்கை வளம் நிறைய உள்ள மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். தண்ணீர், பசுமைக்கு இங்கு குறைவு இல்லை.
எனவே குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக எளிதில் மாற்ற முடியும்.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ குப்பைகளாலும், சாக்கடை கழிவுகளாலும் சுற்றுச்சூழலை மாற்றும் வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்த தலைமுறை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது என்னவென்றால் பணம், சொத்து மட்டுமல்ல சுத்தமான காற்று, தண்ணீர், சுகாதாரமான உணவு. அதற்கான தேவைகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திட்டத்தின் நோக்கம் என்ன?

ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகள், சந்தைகளில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் ஆகியவற்றில் மக்காத பொருட்களை நீக்கி அதற்கான இயந்திரத்தில் போடப்படும். அதில் உணவு, காய்கறி கழிவுகள் அரைக்கப்பட்டு அதில் இருந்து வடிகட்டி பெரிய தொட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு ‘பைரோலோசிஸ்’ என்ற நொதித்தல் முறைக்கு உட்படுத்தப்படும். இதற்காக சோலார் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு சூடான தண்ணீர் தொட்டிக்குள் செலுத்தப்படும். நொதித்தல் நடந்து அதில் இருந்து மீத்தேன் வாயுவாக மாறுகிறது.

இது அந்த பகுதியில் உள்ள சமையல் எரிவாயு கூடத்திற்கு செல்கிறது. அங்கிருந்து மக்களின் பயன்பாட்டிற்கு அந்த எரிவாயு எடுத்துக்கொள்ளப்படும். 2 டன் உணவு கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஆறு சிலிண்டர் வரை சமையல் காஸ் உற்பத்தி செய்யப்படும். இதில் இருந்து உரமும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு டன் உணவு கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 யூனிட் வரை மின்சாரமும் பெற முடியும். இதற்கு ‘நிசர்குருனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயற்கை நமக்கு அளித்ததை மீண்டும் இயற்கைக்கே அளித்தல் என்பது இதன் பொருள் ஆகும்.

The post குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nagercoil ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில்...