வையகம் போற்றும் பல ஆசார்ய புருஷர்களை நமக்காக அள்ளி வழங்கி இருக்கும் ஒரு மாதம் வைகாசி மாதம். வைகாசி விசாகத்தில் நம்மாழ்வாரை தந்து, வைகாசி அனுஷத்தன்று ஸ்ரீரங்கநாதரின் செல்ல பிள்ளையான பராசரபட்டரை இப்பாருக்கு அளித்து பரவச மடைந்திருக்கிறது வைகாசி மாதம். பெரிய பெருமாள், பெரிய கோயில் என்று எல்லாமே பெரிய அளவில் இருக்கக் கூடிய அந்த ரங்கநாத பெருமாளுக்கு, குடும்பமும் பெரிய குடும்பம் என்றே குறிப்பிடுவார்கள் ஆசார்ய பெருமக்கள். கூரம் எனும் தம் ஊரை விட்டு, தன் அத்தனை செல்வத்தை அப்படியே விட்டுவிட்டு, அரங்கனின் அருள் செல்வமும், தன் ஆசார்யரான ஸ்வாமி ராமானுஜருக்கு, தான் செய்யக் கூடிய கைங்கர்ய செல்வமும் மட்டுமே தனக்கு வேண்டும் என்று திருவரங்கத்திற்கு தமது தர்மபத்னியுடன் வந்தவர், கூரத்தாழ்வான்.
அனுதினமும் பிட்சை எடுத்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த கூரத்தாழ்வானுக்கு, மழை வடிவில் ஒரு சோதனையை தந்தான் மாதவன். விடாது பல நாட்கள் மழை கொட்டி தீர்த்து, கூரத்தாழ்வானை தன் வீட்டை விட்டே வெளியே செல்ல முடியாமல் செய்துவிட்டது, பெரிய பெருமாள் உண்டாக்கிய பெருமழை. பசியை மறந்து, உணவை துறந்து திருமாலின் பாசுரங்களை மட்டுமே சொல்லிக் கொண்டு, தன் திருமாளிகையில் (வீட்டில்) இருந்தார் கூரத்தாழ்வான். அவரும் பட்டினி, அவரது தர்ம பத்தினியும் பட்டினி. ஆனால், அவளது செவிக்கு உணவாக அவளது கணவன் சொல்லும் பாசுரங்கள் மட்டும் இருந்து வந்தது.
கொட்டும் மழை சத்தத்தை மீறி, ஆண்டாளின் காதில் அரங்கநாதனுக்கு அரவணை பாயசம் நைவேத்தியம் செய்யும் போது, ஒலிக்கப்படும் மணி ஓசை, அவள் காதில் வந்து விழுந்தது. உடனே அவள் மானசீகமாக அந்த அரங்கனிடம், “என்ன பெருமாளே இது.. உன் பரம பக்தனான எம் கணவர் பல நாட்களாக பிட்சை எடுக்க போக முடியாமல் பட்டினியாக இருக்கிறார். நீர் அரவணை பாயசத்தை சந்தோஷமாக சாப்பிடுகிறீரோ?” என்று கேட்டாள்.
உடனே பெரிய பெருமாள், அங்கே கோயிலில் குழுமியிருந்தவர்களை பார்த்து, “இதோ இந்த அரவணை பாயசத்தை யாரும் தொடக் கூடாது. இதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் கூரத்தாழ்வானிடம் சென்று கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று உத்தரவிட்டார். பேசும் பெருமாளான பெரிய பெருமாள் வாக்கிற்கு மறுப்பு உண்டா என்ன? உடனே அங்கிருந்த பாகவதோத்தமர்கள், குடைகளோட நடை கட்டி கொண்டு, கையில் அரங்கனின் அரவணை பாயசத்தையும் ஏந்தி கொண்டு கூரத்தாழ்வானின் வீட்டின் வாயிலை வந்தடைந்தனர். கூரத்தாழ்வானுக்கு ஒண்ணுமே புரியவில்லை. எதற்காக இப்படி கொட்டும் மழையில் கொட்டும் மேள சத்தத்தோடு இப்படி பெருமாள் நமக்கு பிரசாதம் கொடுத்தனுப்பி இருக்கிறார் என்று எண்ணியபடியே அவர் மனைவியை பார்த்தார்.
“நீதான் பெருமாளிடம் கேட்டாயா? எதற்காக பெருமாளை நிர்பந்தித்தாய்?” என்று கோபமாக கேட்டார் கூரத்தாழ்வான்.“நீங்கள் இப்படி பட்டினியால் வாடுவதை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்கள் மீது இருந்த அன்பினால் அந்த அரங்கனிடம் மனதால் கேட்டேன்” என்றாள் மனைவி.
“சரி பகவத் பிரசாதம் வீடு தேடி வந்திருக்கிறது அதை அலட்சியபடுத்த கூடாது’’ என எண்ணிய கூரத்தாழ்வான், அந்த பிரசாதத்திலிருந்து இரண்டு கவளங்களை மட்டுமே எடுத்து கொண்டு, ஒரு கவளத்தை தான் சாப்பிட்டு, மற்றொரு கவளத்தை தன் மனைவிக்கு கொடுத்தார். குடும்ப வாழ்க்கையில் எந்த வித ஈடுபாடும் காட்டாமல் வாழ்ந்து வந்த கூரத்தாழ்வானுக்கும், அவரது மனைவி ஆண்டாளுக்கும், அரங்கனின் அரவணை பாயசம் தந்த பரிசாக பிறந்த இரட்டையர்களில் ஒருவரே பராசரபட்டர். ஸ்வாமி ராமானுஜராலேயே பராசரர் என்றும், வேத வியாசர் என்றும் பெயர் சூட்டப் பெற்ற பேறு அந்த இரு குழந்தைகளுக்கும் கிடைத்தது. அந்த இரு குழந்தைகளையும் ஸ்ரீரங்கம்கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் உள்ள தூளியில்தான் கட்டிவிட்டு செல்வாராம் கூரத்தாழ்வான்.
“அரங்கா.. நீ தானே இந்த குழந்தைகளை கொடுத்தாய். இனி இந்த குழந்தைகளை வளர்க்க வேண்டியது உன் பொறுப்புதான்’’ என்று சொல்லிவிட்டு பகவத் பாகவத கைங்கர்யம் செய்ய புறப்பட்டு சென்று விடுவாராம், ஆழ்வான். அரங்கனின் மேற்பார்வையில் வளர்ந்தவரே பராசரபட்டர் என்று இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா? ஸ்ரீரங்கநாதருக்கும், ரங்கநாயகி தாயாருக்கும் ஸ்வீகார புத்திரராகவே மாறிப்போனார் பராசரபட்டர் என்று பல ஆசார்யர்கள் ஆச்சரியமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். பராசர பட்டரே, ‘‘தான் பெருமாளாலும் தாயாராலும் தூளியில் ஆட்ட பெற்றவன்” என்றே தம்முடைய ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பராசரபட்டரின் புத்திக் கூர்மையையும், பேச்சு சாதுர்யத்தையும் பாராட்டாதவர்களே இருக்க முடியாது. பராசர பட்டர் இருக்கும் இடத்தில் அரங்கனும் வந்து வாசம் செய்வான் தானே? பராசர பட்டரோடு ரங்கநாதனும், ரங்கநாயகியும் நம் மன வீட்டிற்குள் நிச்சயம் வந்திருந்து நமக்கு அருள் புரிவார்கள்.
நளினி சம்பத்குமார்
The post ஸ்ரீரங்கநாதனின் புத்திரரான பராசரபட்டர்! appeared first on Dinakaran.