×

மைத்துனரை கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை, ஜூன் 12: மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த மைத்துனரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுரை மாவட்டம் மேலூரை அருகே கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி(48). பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி. தமிழரசி, பசுபதியுடன் ஏற்பட்ட தகராறில் தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு சிவகங்கை மாவட்டம் பூவந்தியை அருகே சொக்கையன்பட்டி கிராமத்தில் வசிக்கும் தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.

இதையடுத்து பசுபதி கடந்த 12.3.2017 அன்று மனைவியை சமரசம் செய்து அழைத்துச் செல்ல வந்துள்ளார். அப்போது பசுபதிக்கும் அவரது மைத்துனர் பாண்டி(47) மற்றும் அவரது மாமனாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பசுபதி அன்று இரவு தூங்கும் போது பாண்டியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.

பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகர்சாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் குற்றம் சாட்டப்பட்ட பசுபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post மைத்துனரை கொலை செய்த பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivaganga ,Pashupati ,Kottakudi ,Melurai ,Madurai district ,
× RELATED சிவகங்கை அருகே சாலையோர இரும்பு தடுப்புகள் மாயம்