×

மின் இணைப்பு கோரிய ராஜேஷ்தாசின் மனு தள்ளுபடி

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவின் மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மின்வாரிய வழக்கறிஞர் ஜெய் வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி, வீடு மனுதாரர் பெயரில் இல்லாத பட்சத்தில் அவர் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கோர முடியாது என்று வாதிட்டனர்.

இதனையடுத்து, பீலா வெங்கடேசன் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வீட்டின் மீது ராஜேஷ் தாசுக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுக்க முடியாது என்றார். அதற்கு, ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், வீடு கட்டுவதற்காக பெறப்பட்ட வீட்டுக்கடனை மனுதாரர்தான் செலுத்தி வருகிறார். அவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு மீண்டும் அவரது பங்களாவுக்கு மின் இணைப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, பங்களா யாருக்கு சொந்தமானது என்பது குறித்த கேள்வி உள்ள நிலையில் மனுதாரர் ராஜேஷ் தாஸ் மின் இணைப்பு கோரி வழக்கு தொடரமுடியாது என்று கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வீட்டு உரிமை தொடர்பாக அவர் உரிய நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டுமே தவிர உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு மூலம் நிவாரணம் பெற முடியாது என்று கூறி ராஜேஷ் தாசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post மின் இணைப்பு கோரிய ராஜேஷ்தாசின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Rajeshtha ,CHENNAI ,DGP ,Rajesh Das ,Chennai High Court ,Taiyur Bungalow ,Chengalpattu district ,J. Ravindran ,Board ,Jai Venkatesh ,
× RELATED நெல்லையில் வாலிபர் படுகொலை...