×

இன்று பதவியேற்கிறார் ஒடிசாவின் பாஜ முதல்வராக மோகன் சரண் மஜ்ஹி தேர்வு: 2 துணை முதல்வர்கள் அறிவிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வராக பழங்குடியினத்தை சேர்ந்த மோகன் சரண் மஜ்ஹி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 2 துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பதவி ஏற்பு விழா இன்று நடக்கிறது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில், 24 ஆண்டாக ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் தோல்வி அடைந்தது. 147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில் பாஜ 78 இடங்களுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பிஜூ ஜனதா தளம் 51 இடங்களில் வென்றது.

இதைத் தொடர்ந்து, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் புவனேஸ்வரில் நேற்று நடந்தது. கூட்டத்தில், முதல்வராக பழங்குடியினத்தை சேர்ந்த 52 வயதாகும் மோகன் சரண் மஜ்ஹி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 4 முறை எம்எல்ஏவான இவர், முந்தைய ஆட்சியில் பாஜவின் தலைமை கொறடாவாக இருந்தவர். மேலும், கே.வி.சங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா ஜனதா மைதானத்தில் இன்று பிற்பகல் நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

* யார் இவர்?
ஒடிசாவின் 15வது முதல்வராக பதவி ஏற்க உள்ள மோகன் சரண் மஜ்ஹி, கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ரெய்காலா கிராமத்தைச் சேர்ந்த காவலாளியின் மகன். இவர் 1997-2000 வரை கிராமத் தலைவராக இருந்தார். 2000ம் ஆண்டில் கியோஞ்சார் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த தேர்தலில் கியோஞ்சர் தொகுதியிலிருந்து 4வது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

The post இன்று பதவியேற்கிறார் ஒடிசாவின் பாஜ முதல்வராக மோகன் சரண் மஜ்ஹி தேர்வு: 2 துணை முதல்வர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mohan Saran Majhi ,Odisha BJP ,Chief Minister ,Chief Ministers ,Bhubaneswar ,Tribal Mohan Saran Majhi ,Odisha ,Deputy Chief Ministers ,Lok Sabha elections ,Legislative Assembly elections ,Minister ,Dinakaran ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில்...