×

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்

திருமலை: தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்கிறார். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜ 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக இன்று 4வது முறையாக பதவியேற்கிறார்.

இதையொட்டி கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சட்டமன்ற கூட்டணி கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை ஜனசேனா கட்சி தலைவரான நடிகர் பவன்கல்யாண் முன்மொழிந்தார். அனைத்து எம்எல்ஏக்களும் இதை ஏற்றுக்கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் இன்று ஆளுநருக்கு அனுப்பி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு, பவன்கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிஎவ்வாறு ஆட்சி நிர்வாகம் இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்தது. இதனால்தான் மக்கள் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளனர். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் பழிவாங்கும் அரசியல் இருக்காது. அதேநேரத்தில் தவறு செய்தவர்களை சும்மா விடக்கூடாது. இல்லையென்றால் அதுவே தவறு செய்ய வழிவகுக்கும் என்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அளித்த தீர்ப்பை நிலைநாட்டும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. உயர்ந்த லட்சியத்திற்காக 3 கட்சிகளும் இணைந்தோம்.

மக்கள் வெற்றி பெற செய்தனர். 3 கட்சிகளின் 100 சதவீதம் பரஸ்பர ஒத்துழைப்பால் இந்த வெற்றி சாத்தியமானது. தேர்தலில் 93 சதவீத வெற்றி என்பது நாட்டு வரலாற்றில் அரிய தருணம். 57 சதவீத மக்கள் வாக்களித்துள்ளதால், இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஜனசேனா 21 இடங்களை கேட்டு பெற்று 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க 10 இடங்களை பெற்று 8ல் இடங்களில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் இல்லை. சிறையில் நான் இருந்தபோது என்னை சந்தித்து கூட்டணியை முதலில் அறிவித்தது பவன் கல்யாண்.

அன்று முதல் எந்த தவறும் இல்லாமல் மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்லவும் பவன் கல்யாண் துணையாக இருந்தார். தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் செய்ததால் கள அளவில் வாக்குப் பரிமாற்றத்துக்கும் வெற்றிக்கும் வழி வகுத்தது. நாளை(இன்று) முதல்வராக பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு என்.டி.ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநில வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க மோடி, அமித்ஷா சம்மதம் தெரிவித்துள்ளனர். தேர்தலில் நமக்கு கிடைத்திருப்பது வெற்றி அல்ல மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு. ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கில் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து இன்று லட்சக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் அப்துல்நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள், யார் யார் அமைச்சர்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநில முதல்வர்கள், திரைபிரபலங்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

* அமராவதிதான் தலைநகர்
சந்திரபாபு பேசுகையில், ‘அமராவதியை நமது மாநிலத்தின் தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை பொருளாதார தலைநகராகவும் உருவாக்கப்படும். பிரஜா மேடை போன்ற அழிவு அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டும். ஆனால் விசாகப்பட்டினம் வளர்ச்சியை மறக்க மாட்டோம். கர்னூலை நீதித்துறை தலைநகர் என்று கூறி செய்த மோசடியை மக்கள் உணர்ந்துள்ளனர். கர்னூல் வளர்ச்சிக்காகவும் உறுதி பூண்டுள்ளோம்’ என்றார்.

The post தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Andhra Chief Minister ,National Democratic Alliance MLAs Meeting ,Tirumala ,Legislative ,Party ,National Democratic Alliance ,Chief Minister of ,Andhra ,Pradesh ,Telugu Desam Party ,Janasena ,BJP ,Andhra Assembly ,NDA MLAs ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...