புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவைத் தொடர்ந்து, பாஜ கட்சியில் விரைவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் உட்பட பல மாநில தலைவர்கள் மாற்றப்பட உள்ளனர். இதனால் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாக குறிவைத்த பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கூட கிடைக்கவில்லை. 240 சீட்களில் மட்டுமே வென்றதால், ஒன்றியத்தில் கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவைத் தொடர்ந்து விரைவில் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பதவிக்காலம் இம்மாதம் 30ம் தேதியுடன் முடிகிறது. அவர் தற்போது ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். நட்டாவுக்கு பதிலாக கட்சி தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சிவ்ராஜ் சிங் சவுகான் தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ் போன்றவர்களும் ஒன்றிய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இதனால், நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரையிலும் நட்டாவே பதவியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளது.
இதே போல, மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை தராத மாநிலங்களில் உள்ள மாநில மாவட்ட தலைவர் பதவிகளையும் மாற்ற பாஜ முடிவு செய்துள்ளது.
குறிப்பாக உபியில் எதிர்பாராத தோல்வியை சந்தித்ததால் அம்மாநில பாஜ தலைவர் பூபேந்தர் சிங் சவுத்ரி பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. மேற்கு வங்க பாஜ தலைவர் மஜூம்தர் ஒன்றிய அமைச்சராகி இருப்பதால் அவரது இடத்திலும், பீகாரில் சாம்ராத் சவுத்ரி துணை முதல்வராகி இருப்பதால் அவரது இடத்திலும் வேறு தலைவர்களை நியமிக்க உள்ளனர். அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியே அம்மாநில பாஜ தலைவராக உள்ளார். எனவே அவரும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மாவைப் போலவே மாநில தலைவர் சி.பி.ஜோஷியும் பிரமாணர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அங்கும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இம்முறை பாஜ கட்சி சிறப்பாக செயல்படும் என மோடி பெரிதும் நம்பினார். ஆனால் ஒரு இடத்தில் கூட பாஜ கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த தோல்விக்கு தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைதான் காரணம் என்று அக்கட்சியினரே வெளிப்படையாக பேச துவங்கிவிட்டனர். மேலும், கட்சிக்குள் அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை போர்க்கொடி தூக்கி உள்ளார். எனவே, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கூட மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
The post மக்களவை தேர்தல் முடிவு எதிரொலி 6 மாநில பாஜ தலைவர்கள் விரைவில் மாற்றம்: அண்ணாமலை பதவி தப்புமா? appeared first on Dinakaran.