×

தேர்தல் தோல்வி, ஒன்றிய அமைச்சர்களானதால் தமிழ்நாடு உட்பட 5 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்? ஜே.பி.நட்டாவும் அமைச்சரானதால் திடீர் திருப்பம்

டெல்லி: தமிழ்நாடு, தெலங்கானா உட்பட 5 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் ஒன்றிய அமைச்சரானதால் சிக்கல் நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பிரசாரம் செய்த பாஜகவுக்கு, பெரும் அடியாக தனிப் பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. அதனால் ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. அதனால் தேர்தலில் சரியாக பணியாற்றாத மாநில தலைவர்களை மாற்ற, தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க குஜராத், தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநில பாஜக தலைவர்களுக்கு பதிலாக புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏனெனில் இந்த மாநிலங்களின் தற்போதைய மாநிலத் தலைவர்கள், மோடியின் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளன. இவை தவிர, சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படாததால், தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநில பாஜக மாநிலத் தலைவர்களையும் மாற்றுவதற்கான வாய்ப்பு வலுத்துள்ளது.

தற்போதைய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெற்றதால், பாஜகவின் தேசியத் தலைவரும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஜே.பி.நட்டாவின் பதவிக்காலமும் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனத்திற்கு பிறகே, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கான புதிய மாநில தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. விரைவில் ஜே.பி.நட்டாவுக்குப் பதிலாக புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்; குஜராத்தில் பாஜக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், குஜராத் பாஜக தலைவரும், நான்கு முறை எம்பியுமாக இருந்த சி.ஆர்.பாட்டீலுக்கு ஒன்றிய அமைச்சரவையில் மோடி இடம் அளித்துள்ளார். இருப்பினும், குஜராத் பாஜக தலைவராக இருந்த அவரது பதவிக்காலம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. மக்களவைத் தேர்தல் வரை இந்தப் பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். தற்போது அவர் ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெற்றதால், அவருக்கு பதிலாக புதிய மாநில தலைவர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஒரு மாதத்திற்குள் மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ஓபிசி சமூக மக்கள் மத்தியில் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதால், ஓபிசி தலைவர் ஒருவரை மாநில தலைவராக நியமிக்கலாம் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

தெலங்கானா; தெலங்கானா பாஜக மாநில தலைவர் கிஷன் ரெட்டி, மீண்டும் ஒன்றிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்குப் பதிலாக வேறொரு ஓபிசி சமூகத்தை சேர்ந்த ஒருவரை பாஜக தலைமை தேடி வருகிறது. தெலங்கானாவின் புதிய தலைவராக எம்பி எட்டலா ராஜேந்திரா என்பவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேற்குவங்கம்; மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வென்றது. அதே 2019 மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் 22 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 18 இடங்களில் வென்றது. இந்த நிலையில் மேற்குவங்க மாநில பாஜக தலைவர் சுகந்த் மஜும்தார், தற்போது ஒன்றிய அமைச்சரானார், அதனால் அவருக்குப் பதிலாக புதியதாக மாநில தலைவரை தேடும் பணி நடக்கிறது. ராஜஸ்தான்; ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 14 இடங்களில் மட்டுமே ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளதால், மாநில தலைமையை மாற்ற தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. முன்னதாக, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது.

கட்சியின் செயல்பாடுகள் மோசமான நிலைக்கு சென்றதால், தற்போது எம்பியாக இருக்கும் மாநிலத் தலைவர் சி.பி.ஜோஷியை மாற்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. புதிய மாநிலத் தலைவர் பதவிக்கு ராஜ்யசபா எம்பி ராஜேந்திர கெலாட், குல்தீப் தன்கர், மதன் ரத்தோர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. தமிழ்நாடு தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததால், சில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை மாநில பாஜக எதிர்கொண்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம் என்று மாநில பாஜக தலைவர்கள் சிலர் வெளிப்படையாக பேசி வருகின்றனர். மேலும் அண்ணாமலைக்கு எதிராக கட்சிக்குள் குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் நெருக்கமான தலைவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல்கள் இருந்து வருகின்றன. இதனால் அண்ணாமலைக்கு மாற்றாக புதிய மாநில தலைவரை தேர்வு ெசய்யும் பணியில் தேசிய தலைமை ஈடுபட்டுள்ளது.

 

The post தேர்தல் தோல்வி, ஒன்றிய அமைச்சர்களானதால் தமிழ்நாடு உட்பட 5 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்? ஜே.பி.நட்டாவும் அமைச்சரானதால் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil ,Nadu ,JP Natta ,Delhi ,Tamil Nadu ,Telangana ,
× RELATED நீதியரசர் சந்துரு குறித்து பேச...