×

வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

*உற்சாகமாக வந்த மாணவர்கள்

*நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால், முதல் நாளில் மாணவர்கள் உற்சாக வந்தனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 10ம் தேதி 1ம் முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து, பள்ளிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தனியார், நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் நேற்று 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வர தொடங்கினர். முதல் நாளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பைக்குகளில் அழைத்து வந்துவிட்டு சென்றனர். அவர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரோஜா பூ கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

மேலும் ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். காலை 9.15 மணியளவில் இறைவணக்கத்துடன் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவசமாக பாட புத்தகங்கள், நோட்கள், சீருடைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்களது பாடத்தை தொடங்கினர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் 158 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 87 ஆயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், 65 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாவட்டத்தில் உள்ள 779 அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1ம் முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 58 ஆயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. அதோடு மாணவர் சேர்க்கை அதிகரித்தால், அதற்கேற்ப 5 முதல் 10 சதவீதம் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்க வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், புதிய பள்ளிகளில் சேரும் மாணவர்களக்கு உடனடியாக பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடம் பிடித்த குழந்தைகள்

கோடை விடுமுறை முடிந்து தொடக்கபள்ளிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வயது மற்றும் 4 வயது நிரம்பிய குழந்தைகளையும் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை தங்கள் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு புத்தாடை அணிவித்து, பேக் உடன் அழைத்து வந்தனர். ஆனால் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அடம் பிடித்து அழுதனர். இருப்பினும் பெற்றோர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

The post வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!