×
Saravana Stores

சௌதாபுரம் ஊராட்சியில் அரசு நிலத்தில் வளர்க்கப்பட்ட 150 பழமரங்கள் வெட்டி சாய்ப்பு

*மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் ஒன்றியம், சௌதாபுரம் ஊராட்சியில் கடந்த 3 வருடங்களாக, சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பொறுப்பு வகித்த போது, கிராம சாலையோரங்களில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, தற்போது நல்ல நிலையில் உள்ளது. இங்குள்ள மேட்டுக்காடு பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், கடந்த 3 வருடங்கள் முன்பு நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு, சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. மா, பலா, கொய்யா, நெல்லி, நாவல் உள்ளிட்ட பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் உணவளிக்கும் வகையில் நடப்பட்ட இந்த மரக்கன்றுகள் நன்கு செழித்து வளர்ந்து வந்தன.

இந்த கன்றுகளை ஊராட்சி மன்றம் மூலம், நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இப்பகுதியில் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மர்ம கும்பல் வெட்டி சாய்த்து விட்டு சென்றுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் வெப்படை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மரக்கன்றுகள் வளர்க்கப்பட்ட புறம்போக்கு நிலத்தில், வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை பெற்றுத்தருவதாக ஒரு கும்பல், சில வருடங்களாக பொதுமக்களிடம் பண வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.

இந்த கும்பல் அரசு அதிகாரிகளை அணுகி, வீட்டுமனை பட்டா தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. மரக்கன்றுகள் வளர்ந்து பலன் கொடுக்க துவங்கினால், வீட்டுமனை கோரிக்கை பாதிக்கப்படலாம் என கருதி, இதுபோன்ற நாசகார செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சௌதாபுரம் ஊராட்சியில் அரசு நிலத்தில் வளர்க்கப்பட்ட 150 பழமரங்கள் வெட்டி சாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chautapuram Uratchi ,Police Web School for Mystery Gang: School Union ,Chautapuram Uradachi ,Sakayam ,Namakkal ,
× RELATED தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு...