×

3 மாதங்களுக்கு பின் ஊட்டியில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஊட்டி : மூன்று மாதங்களுக்கு பின் ஊட்டியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.62 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைெபறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 3 மாதங்களாக இக்கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 6ம் தேதி தளர்த்தி கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு பின் நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் 140 மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பொதுமக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து ஸ்டேன்லி மேத்யூஸ் என்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி மாதம் ரூ.5 ஆயிரம் பெறுவதற்கான அனுமதி ஆணை, டோனி ஜோசப் என்பவருக்கு தனது மகளின் திருமணத்திற்காக திருமண மானியமாக ரூ.25 ஆயிரம் பெறுவதற்கான ஆணை, ஷியாமளா என்பவருக்கு தனது மகள் திருமணத்திற்கான திருமண மானியம் ரூ.25 ஆயிரம் பெறுவதற்கான ஆணை, ரெஜினா மேரி என்பவருக்கு தனது தாய் (முன்னாள் படை வீரரின் விதவை) இறந்தமைக்கு ஈமச்சடங்கு மானியமாக ரூ.7 ஆயிரம் பெறுவதற்கான அனுமதி ஆணை என 4 பேருக்கு தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நல நிதியில் இருந்து ரூ.62 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலங்கள்) தமிழ்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் இந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 3 மாதங்களுக்கு பின் ஊட்டியில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Day ,People's Minority Meeting ,Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்