×

கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

*உற்சாகமாக வந்த மாணவ, மாணவிகள்

*பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
தமிழ்நாட்டில் 2023-24ம் கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

அதனை தொடர்ந்து, கோடை விடுமுறையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை சரிபார்த்தல் போன்ற பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், 2024-2025ம் கல்வியாண்டிற்காக நேற்று முதல் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள், பகுதிநேர நிதியுதவி பள்ளி
கள், சிறப்பு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் உள்ளன. நேற்று பள்ளிகள் திறப்பதையொட்டி வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்டவைகள் சுத்தம் செய்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நேற்று பள்ளிகள் திறந்ததும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

அவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பள்ளி திறந்த முதல் நாளே மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, நோட்டு, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதேபோல் மாணவ, மாணவிகள் கடந்தாண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது சீருடை, அடையாள அட்டை காண்பித்து நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவ-மாணவிகள் பள்ளி சீருடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மேலும் அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிள் மற்றும் அரசு பேருந்தில் பயணிக்க கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பயண அட்டையை கொண்டு பேருந்தில் இலவசமாகவும் பயணித்து மகிழ்சியுடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது அந்தந்த பள்ளிகளை சேர்ந்த இருபால் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

The post கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram, Kallakurichi district ,Villupuram ,Tamil Nadu ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்!