×

மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் நோட்டுப்புத்தகம் விநியோகம் செய்யும் பணியை, கலெக்டர் ெதாடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1720 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 605 அரசு துவக்கப்பள்ளிகள், 146 நடுநிலைப்பள்ளிகள் என 751 பள்ளிகளும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 540 துவக்கப்பள்ளிகள், 157 நடுநிலைப்பள்ளிகள் என 697 பள்ளிகளும், ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 165 உயர்நிலைப்பள்ளிகளும், 107 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 1720 பள்ளிகளில் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடப்புத்கங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம், அந்தந்த பகுதி பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து, அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, பாடபுத்தங்களை வழங்க கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், தமிழக அரசின் விலையில்லா பாடபுத்தங்கள் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் சரயு மாணவர்களுக்கு பாடபுத்தகங்ளை வழங்கும் பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள், பள்ளி துவக்க நாள் முதலே வழங்கப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிதி சுமையை குறைக்கும் பொருட்டு, அரசே புத்தம் புதிய பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி விகிதத்தில் 37வது இடத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், இவ்வாண்டு 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பெருமைக்குரியது. இதற்காக கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

10ம் வகுப்பு மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றால் தான், 11ம் வகுப்பில் விரும்பிய பாடங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் உயர்கல்வி பெற்று நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும். இப்போதிலிருந்தே பாடத்திட்டங்களை நன்கு புரிந்து படித்து, பள்ளியில் நடைபெறும் மாதாந்திர தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களான தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து, பள்ளியில் மட்டுமல்லாமல், வீட்டிற்கு சென்ற பின்பும் முழு கவனத்துடன் நன்கு படிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதால், மாணவர்களாகிய நீங்கள் அவர்களுக்கு இணையாக தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி, ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை ஈட்டித்தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.முன்னதாக, பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதுப்பிப்பு மற்றும் புதிய ஆதார் அட்டை எடுக்கும் பணிகளை, கலெக்டர் சரயு பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், உதவி திட்ட அலுவலர் வடிவேலு, பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல் சுப்பிரமணி, நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district… ,
× RELATED குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை