×

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் எத்திலீன் ரசாயனம் பயன்படுத்தும் கடைகளை கண்காணிப்பதற்கு குழு: 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு

அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில், தடையை மீறி எத்திலீன் ரசாயனம் மூலம் வாழைத்தார்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாகவும், இதனை தொடர்ந்து சாப்பிடும் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. மேலும், தடையை மீறி இதுபோன்ற ரசாயனம் பயன்படுத்தும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதிப்பதுடன் மட்டுமின்றி கடைக்கு சீல் வைக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை நிர்வாக அலுவலர் இந்துமதி தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதிகாரிகளுக்கு தெரியாமல் எத்திலியன் மூலம் வாழைக்காய்களை பழுக்க வைத்து வாழை பழங்களாக மாற்றி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஒரு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த கடைக்கு ₹5,000 அபராதம் விதித்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்வதை அறிந்த சில வியாபாரிகள் ரசாயனத்தால் பழுக்க வைத்த பழங்கள் மற்றும் எத்திலீன் ஆகியவற்றை மறைத்து, கடையை மூடிவிட்டு மாயமாகினர்.

இதுகுறித்து அங்காடி நிர்வாக அதிகாரி கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில அதிகாரிகளுக்கு தெரியாமல் ரசாயனம் மூலமாக வாழைத்தார்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாகவும், இதுபோன்ற கடைகளை கண்டறிந்து சீல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற, பழ மார்க்கெட்டில் நேற்று திடீர் ஆய்வு செய்தோம். அப்போது, ரசாயனம் மூலம் பழுக்க வைத்த கடை ஒன்றை கண்டறிந்து ₹5,000 அபராதம் விதித்ததுடன், அந்த கடைக்கு சீல் வைத்தோம். கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுப்பர். கடைகளில் ரசாயனம் மூலம் காய்களை பழுக்க வைப்பது தெரிந்தால், அங்காடி நிர்வாக அலுவலர்களிடம் புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் பல வருடங்களாக எத்திலின் ரசாயனம் மூலம் வாழைத்தார்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாகவும், அந்த கடைகளை கண்டறிந்து சீல் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். அதன்பேரில், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையில் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு செய்து ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த வாழைப்பழங்களை பறிமுதல் செய்து, ஒரு கடைக்கு சீல் வைத்துள்ளனர். விதிமீறும் கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனி குழு 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது,’’ என்றனர்.

The post கோயம்பேடு பழ மார்க்கெட்டில் எத்திலீன் ரசாயனம் பயன்படுத்தும் கடைகளை கண்காணிப்பதற்கு குழு: 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Committee to monitor shops using ,Koyambedu ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன்...