×

கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் ரசாயனத்தில் பழுக்க வைத்த வாழைப்பழம் விற்ற 6 கடைகளுக்கு சீல்: அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் அதிரடி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் ரசாயனத்தால் பழுக்க வைத்த வாழைப்பழம் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், தலா ₹5 ஆயிரம் அபராதம் விதித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகளிடையே புகார் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த 10ம் தேதி முதல் பழ மார்க்கெட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
3வது நாளான நேற்றும் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, எத்திலீன் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனைக்கு வைத்திருந்த வாழைப்பழங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், விற்பனை செய்த 6 கடைகளுக்கு தலா ₹5 ஆயிரம் வீதம் ₹30 ஆயிரம் அபராதம் விதித்தனர். அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனை அறிந்த வியாபாரிகள் கடைகளில் வைத்திருந்த எத்திலீன் ரசாயனம் பாட்டில்களை அகற்றினர். இதுகுறித்து அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் கெமிக்கல் மூலமாக வாழைப்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வியாபாரிகளிடையே கோரிக்கை எழுந்தது. அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்களை விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் தலா ₹5 ஆயிரம் வீதம் ₹30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த பழங்கள் விற்பனையை தடுக்க அங்காடி நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் கெமிக்கல் கலந்த வாழைப்பழம் விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். கோயம்பேடு மார்க்கெட்டில் கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை குறித்து வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்’’ என்றனர். வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் பல வருடங்களாக எத்திலீன் கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் விற்பனை குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு செய்து கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கைகளை முதன்மை அங்காடி நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் ரசாயனத்தில் பழுக்க வைத்த வாழைப்பழம் விற்ற 6 கடைகளுக்கு சீல்: அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Administrative ,Chennai Koyambedu Market… ,Dinakaran ,
× RELATED அமாவாசை முன்னிட்டு இன்று கோயம்பேடு...