×

தங்கம் விலை மேலும் சரிவு இரண்டு நாட்களில் சவரன் ரூ.1,680 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1680 குறைந்துள்ளது. இந்த தொடர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஒரு நிலையான விலையில் இல்லாமல் குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது.

அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.6,650க்கும், சவரனுக்கு ரூ.1520 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. அதிரடி விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,040க்கு விற்பனையானது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது. மேலும் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.53 ஆயிரத்துக்குள் வந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.53 ஆயிரத்துக்குள் வந்துள்ளது.

The post தங்கம் விலை மேலும் சரிவு இரண்டு நாட்களில் சவரன் ரூ.1,680 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்