×

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இன்ஸ்டா காதலிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் காதலன் கைது

வளசரவாக்கம், ஜூன் 10: சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், நான், சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தோம். இதனிடையே, பாலாஜியின் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் பேசவில்லை. மேலும், எனது பெற்றோர் ஏற்பாடு செய்த மாப்பிள்ளையுடன் எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. இதனை அறிந்த பாலாஜி செல்போனில் தொடர்பு கொண்டு என்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன், என்று மிரட்டினார்.

மேலும், நாங்கள் காதலித்தபோது எடுத்துக் கொண்ட போட்டோக்களை மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி வைத்து மிரட்டுகிறார். இதனால், என் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதனையடுத்து இளம்பெண் அளித்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் பாலாஜியை அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, பாலாஜி போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென்று எனது செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார்.

இதனிடையே இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், காதலித்தபோது அவர் எனக்கு அளித்த செயின், மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்தேன். இதனால், நாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை மாப்பிள்ளையின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி மிரட்டியதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, போலீசார் பாலாஜியை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் காதலிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் காதலனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இன்ஸ்டா காதலிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Valasaravakkam ,Chennai Arumbakkam ,Annanagar, Chennai ,Balaji ,Ramanathapuram district ,Instagram ,
× RELATED ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில்...