×

குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில் கருவிழி ஸ்கேன் கருவி கைரேகை பதிவு சிக்கலை தவிர்க்க நடவடிக்கை

நாகர்கோவில், ஜூன் 10: குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் கை ரேகைகள் பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன் செய்யும் கருவிகள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படுகின்ற ரேஷன் கடைகளில் பிஓஎஸ் எனப்படும் பாயின் ஆப் சேல் கருவி மூலம் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து, ரேஷன்கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்த பின்னர் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வயதானவர்கள், பெண்கள் பலரின் விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் கடை பணியாளர்களுக்கும், ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதை தடுக்க கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பி.ஓ.எஸ் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் பரீட்சார்த்த முறையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன்கடைகளில் தொடங்கப்பட்டது. அதன்படி கருவிழியை ஸ்கேன் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்தி தாமதமின்றி பொருட்களை நுகர்வோருக்கு வழங்க முடியும். ரேஷன்கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்து ரசீதும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த கருவியில் விரைவாக ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் வசதியும், மின்சாரம் சார்ஜாகும் வசதியும், நீண்ட நேரம் மின்சாரத்தை வைத்திருக்கும் வகையில் நவீன பேட்டரி வசதியும் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கருவிழியை ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமி புதிய கருவிகளை ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு வழங்கினார். இனி இந்த கருவிகள் உதவியுடன் ரேஷன் கடை பணியாளர்கள் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இது தொடர்பாக வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழியை ஸ்கேன் செய்யும் கருவி வழங்கப்பட உள்ளது. தற்போது 136 கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கடைகளுக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் இந்த கருவி வழங்கப்படும்’ என்றார்.

குமரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களையும் சேர்த்து மொத்தம் 765 ரேஷன் கடைகள் உள்ளன.
இவற்றில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 640 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர்.
மொத்தம் 19 லட்சத்து 30 ஆயிரத்து 520 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

The post குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில் கருவிழி ஸ்கேன் கருவி கைரேகை பதிவு சிக்கலை தவிர்க்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumari District ,Nagercoil ,Tamil Nadu ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு பணம்...